Vettri

Breaking News

காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றப்போவது யார்?




 அம்பாரை மாவட்டத்திலுள்ள 20 உள்ளூராட்சி சபைகளில் கரையோரப் பிரதேசத்திலுள்ள ஒரு உள்ளூராட்சி சபைதான் காரைதீவு பிரதேச சபை .

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த மண். ஆதலால் உலகத்தில் புகழ் பெற்ற மண். அம்பாறை மாவட்டத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் காரைதீவு கிராமம் அமைந்துள்ளது.

இதன் பிரதேச சபை எல்லைக்குள் காரைதீவு, மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளி என மூன்று ஊர்கள் உள்ளன. தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்து அந்நியோன்யமாக வாழ்ந்து வருகின்றனர்.

காரைதீவு பிரதேச சபை  என்பது ஏழு வட்டாரங்களைக் கொண்டது. 
இதில் நான்கு வட்டாரங்கள் காரைதீவு தமிழ் பிரதேசத்திலும் மிகுதி மூன்று வட்டாரங்கள் மாளிகைக்காடு(2) மாவடிப்பள்ளி(1) ஆகிய முஸ்லிம் பகுதிகளிலும் உள்ளன.

காரைதீவில் மொத்த சனத்தொகை 21694 . அவர்களில் மொத்தமாக 14624 வாக்காளர்கள் உள்ளனர்.
அவற்றில் 8659 தமிழ் வாக்காளர்களும் 5965 முஸ்லிம் வாக்காளர்களும் உள்ளனர்.

இயற்கையாக வளம் நிறைந்த பிரதேசமான காரைதீவு பிரதேச சபையானது 

01. காரைதீவு மேற்கு


02. காரைதீவு கிழக்கு


03. காரைதீவு தெற்கு 


04. காரைதீவு வடக்கு


05. மாளிகைக்காடு மேற்கு 


06. மாளிகைக்காடு கிழக்கு


07. மாவடிப்பள்ளி என 07 வட்டாரங்களை கொண்டது. 

சபையின் உறுப்பினர்கள் 11.
எனவே, பிரதேச சபையை கைப்பற்றும் கட்சி குறைந்தது 6 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் தனித்து ஆட்சியமைக்க முடியும். இன்றேல் கூட்டாட்சி தான் சாத்தியம்.

இம்முறை ஏழு கட்சிகள் ஒரு சுயேட்சை உள்ளிட்ட எட்டு அணிகள் போட்டியிடுகின்றன. அதாவது 11 உறுப்பினர்களைப் பெற 14×8= 112
எதிர்வரும்  உள்ளூராட்சி மன்ற தேர்தலில்  காரைதீவு பிரதேச சபைக்கு 11 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 112 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர் .

இம்முறை உள்ளூராட்சித் தேர்தலுக்காக அம்பாறை மாவட்ட செயலகத்தில் 10 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன, அவற்றில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி( ஈபிடிபி ) மற்றும் பொதுமக்கள் ஐக்கிய முன்னணி ஆகியவற்றின் இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஆகவே எட்டு வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதில் 07 கட்சிகளும் 1 சுயேட்சை குழுவும் களமிறங்குகின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சி,  தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி , ஐக்கிய மக்கள் சக்தி,   ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,  ஆகிய 07கட்சிகளும் , முன்னாள் உப தவிசாளர் ஏ.எம்.ஜாகீர் தலைமையிலான 01 சுயேட்சை குழுவும்( தையல் இயந்திரம்) போட்டியிடுகின்றன.

11 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 07 வட்டாரங்களில் 14624 மக்கள் வாக்களிக்க இருக்கின்றனர்.

காரைதீவு பிரதேச சபை ஆள்புல எல்லைக்குள் காரைதீவில் 04 வட்டாரங்களும், மாளிகைக்காட்டில் 02 வட்டாரங்களும், மாவடிப்பள்ளியில் 01 வட்டாரமும்  உள்ளன
கடந்த மூன்று தடவைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்தது.

வட்டார ஆசனங்களைப் பொறுத்தவரை இன்றைய தேர்தல் நிலவரத்தின் படி மாளிகைக்காடு மாவடிப்பள்ளி முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸ்  தேசிய மக்கள் சக்தி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது.

காரைதீவு நான்கு வட்டாரங்களைப் பொறுத்தவரை இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது.
வழமைக்கு மாறாக இம்முறை தேசிய மக்கள் சக்தி எனும் கட்சி புதிதாக தமிழ் முஸ்லிம் வேட்பாளர்களை இணைத்து முதல் தடவையாக போட்டியிடுகிறது.

காரைதீவைப் பொறுத்தவரை அதிகமான அரச ஊழியர்கள் இருக்கிறார்கள்.  படித்தவர்கள் நிறையபேர் உள்ளனர். அவர்கள் எப்போதும் தனித்துவமாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள்.

எது எப்படியோ நாளை தேர்தல். மக்கள் தீர்ப்பைபொறுத்திருந்து பார்ப்போம்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்


No comments