Column Left

Vettri

Breaking News

இன்று சாதாரண தர பரீட்சை ஆரம்பம்; பரீட்சார்த்திகள் கவனிக்க வேண்டியவை!




2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த.சா/த பரீட்சை இன்று (17) திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.


எதிர்வரும் 26 ஆம் தேதி நிறைவடைகிறது.

இலங்கையின் பொதுப் பரீட்சைகள் கொரோனா காரணமாக உரிய வேளையில் நடாத்த முடியாமல் தாமதித்து நடாத்தப்பட்டு வந்தமை தெரிந்ததே.

அக் கலாசாரம் இந்த ஆண்டுடன் நிறைவுக்கு வருகிறது என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

சரி, அது பரீட்சை தொடர்பான அறிமுகம். இனி பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஆயத்தமாகவேண்டிய சில முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வோம்.

பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் சில விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவதாக பரீட்சை நிலையத்திற்கு பரீட்சார்த்தி ஒருவர் செல்லும் போது, பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை,பேனா, பென்சில் மற்றும் அழிறப்பர்,கணித உபகரணங்கள் போன்றவற்றை மாத்திரம் தம்முடன் எடுத்துச் செல்லல் வேண்டும்.

எந்தவொரு தொழில்நுட்ப சாதனங்களையும் எடுத்துச் செல்லக் கூடாது.

அடுத்து பரீட்சை ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன், பரீட்சை மண்டபத்திற்குச் சென்று உரிய சுட்டிலக்கம் கொண்ட மேசை கொண்ட கதிரையில் அமர வேண்டும்.

உதாரணமாக மு.ப.8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும் எனில், மு.ப.8.00 மணிக்கு பரீட்சை மண்டபத்திற்குச் செல்ல வேண்டும்.
பி.ப.1.00 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும் எனில் பி.ப 12.30 மணிக்கு பரீட்சை மண்டபத்திற்குச் செல்ல வேண்டும்.

பரீட்சை ஆரம்பித்து, 30 நிமிடங்கள் தாமதமாக வருகை தரும் மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும்.எனினும் தாமதித்து வருகை தந்த நேரத்திற்கு,மேலதிக நேரம் வழங்கப்பட மாட்டாது.

தாமதமானவர்கள்  பரீட்சைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என 
 பரீட்சை ஆணையாளர் ஜீவராணி புனிதா அறிவித்துள்ளார்.

அடுத்து, பரீட்சைக் காலங்களில் உட்கொள்ளும் உணவுகளில் அவதானம் தேவை. வயிற்றைக் குழப்பும் உணவு வகைகளை தவிர்க்கவும்.
அணியும் சீருடை ஆடைகள் பாதணிகள் சுத்தமாக இருக்க வேண்டும். அதேவேளை அவரும் சுத்தமாக இருக்க வேண்டும்.

வீடுகளில் பரீட்சைக்கு தயார் செய்வதற்கான அத்தனை உதவி ஒத்தாசைகளையும் அதற்கேற்ற அமைதியான உவப்பான சூழலையும் பெற்றோர் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அவர்களது கடமையாகும்.
வீடுகளில் பரீட்சைக் காலங்களில் தொலைக்காட்சி வானொலிகளை தவிர்த்தல் நலம்.

அனைவரும் சிறப்பாக சித்தியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வி.ரி.சகாதேவராஜா
ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்.
( காரைதீவு நிருபர் )

No comments