Vettri

Breaking News

ஜெனிவாவுக்கு விஜயம் செய்யவுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு!!




 ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்காக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இராஜதந்திர சிறப்புக் குழு எதிர்வரும் 23 ஆம் திகதி ஜெனிவாவுக்கு விஜயம் செய்யவுள்ளது.

இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசேட அறிக்கையை இலங்கை தரப்பு சமர்பிக்கவுள்ளதுடன், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பான நீண்ட தெளிவுபடுத்தலையும் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல் வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கவும், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் தீர்மானத்தை நிராகரிக்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இறுதி அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் நகல் வடிவை நிராகரிப்பதற்கு ஜனாதிபதியின் தலைமையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதேவேளை, உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளித்துள்ளது. எனினும், ஜெனிவா தீர்மானத்திலுள்ள பல விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரதூரமான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையிலான நேர்மையான அறிக்கையை கூடிய விரைவில் அரசாங்கம் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த அறிக்கையானது ஜெனிவாவுக்கு பதிலளிப்பதாக அல்லாது எமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவதாகவே அமையும் என அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. புதிய அரசாங்கத்தின் முன்னெடுப்புகளுக்கு சர்தேசத்தின் ஒத்துழைப்புகளை ஜெனிவாவில் கோரவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறிப்பாக, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையிலேயே இந்த சிறப்பு அறிக்கை அமையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டிருந்தார்.

விசேட இராஜதந்திர குழு ஊடாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு அறிக்கையானது தற்போது நிறைவுபடுத்தப்பட்டுள்ளதுடன் அந்த அறிக்கையுடனேயே அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு ஜெனிவா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments