Column Left

Vettri

Breaking News

பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான நடமாடும் சேவை!!





(  வி.ரி.சகாதேவராஜா)

மனித அபிவிருத்தி தாபனமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து புலம்பெயர் தொழிலுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களை ஒன்றிணைத்து பாதுகாப்பான புலம்பெயர் தொழில் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பான நடமாடும் சேவை ஒன்றை எதிர்வரும் 21 ஆம் தேதி நடாத்த திட்டமிட்டுள்ளது.

இந் நடமாடும் சேவை காரைதீவு பிரதேச செயலாளர் ஜி. அருணன் தலைமையில் எதிர்வரும் 2025.01.21ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி - பி.ப 3.30 மணிவரை காரைதீவு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. 

இந் நடமாடும் சேவையினை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  எஸ். ஜெகராஜன்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

 மனித அபிவிருத்தி தாபன இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் கௌரவ அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்;. 

தற்போதய பொருளாதார நெருக்கடி காரணமாக புலம்பெயர் தொழிலுக்கு செல்பவர்கள் அதிகரித்துள்ளார்கள். அவர்களில் அதிகமானவர்கள் புலம்பெயர் தொழில் சட்டத்தினை பின்பற்றாது புலம்பெயர் தொழிலாளர்களாக செல்வதால் பல்வேறு பாதிப்புகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் மற்றும் ஆட்கடத்தல்களுக்கும் உள்ளாகுவதுடன் அவர்களின் குடும்பங்களும், பிள்ளைகளும் பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றார்கள். 
இது தொடர்பாக காரைதீவு பிரதேச மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் நோக்குடன் புலம்பெயர் தொழிலுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகள், பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான நடைமுறைகள், சட்ட ஏற்பாடுகள், அவர்களின் பிள்ளைகள் மற்றும் குடும்பங்களுக்கான நலன்புரி உதவிகள் பற்றியும் மற்றும் ஆலோசனைகளையும் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இந் நடமாடும் சேவை நடாத்தப்படவுள்ளது. 

 'முறையான நடைமுறைகளை பின்பற்றி புலம்பெயர் தொழிலுக்கு சென்று எம்மையும், எமது குடும்பங்களையும் பாதுகாப்போம்'
இந் நடமாடும் சேவையில் கலந்துகொள்ளவுள்ள அரச நிறுவனங்கள் 
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு - கல்முனை 
சட்ட உதவி ஆணைக்குழு - கல்முனை 
பொலிஸ்; - காரைதீவு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக மாவட்ட காரியாலயம் - அம்பாறை
பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர், மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் உளநல உத்தியோகத்தர்.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் காரியாலயம் - சம்மாந்துறை  
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, மாவட்ட செயலகம் - அம்பாறை 

இந் நடமாடும் சேவையில் காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேண்டப்படுகின்றார்கள் என்று 
மனித அபிவிருத்தி தாபன உதவி இணைப்பாளர் எம்.ஜ.றியாழ் கேட்டுள்ளார்.

No comments