Vettri

Breaking News

எந்தவொரு அணியையும் எதிர்கொள்ளும் திராணி இலங்கைக்கு இருப்பதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுத் தலைவர் உப்புல் சந்தன தெரிவிப்பு!!
 நெவில் அன்தனி)

ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக நடத்தப்படும் 9ஆவது ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் எந்தவொரு அணியையும் எதிர்கொள்ளும் திராணி இலங்கைக்கு இருப்பதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுத் தலைவர் உப்புல் சந்தன தெரிவித்தார்.

பக்க சார்பாக அணி தெரிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படுவதை நிராகரித்த அவர், அதிசிறந்த சமபலம் கொண்ட அணியையே தெரிவுசெய்துள்ளோம் எனவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையகத்தில் திங்கட்கிழமை (13) முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

வீரர்களின் உடற்தகுதி, ஆற்றல்கள், ஒழுக்கம் ஆகியவற்றைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு அதிசிறந்த சமபலம் வாய்ந்த 15 வீரர்களைக்கொண்ட குழாத்தை தெரிவு செய்ததாக அவர் கூறினார்.

அமெரிக்காவில் ஆடுகளங்கள் பற்றி கருத்து வெளியிட்ட உப்புல் தரங்க,

அவுஸ்திரேலியாவில் தகடு பெட்டகங்களில் அமைக்கப்பட்ட புற்தரைகளும் ஆடுகள புற்தரைகளும் கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டே மைதானங்களில் நடப்பட்டுள்ளன. பெரும்பாலும் அவை அனைத்தும் புதிய ஆ டு களங்களாக இருப்பதுடன் அவை மந்தகதியைக் கொண்டவையாகும். ஐக்கிய அமெரிக்காவில் நடத்தப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் சராசரியாக 160 ஓட்டங்களே அதிகப்பட்சமாக பெறப்பட்டுள்ளது. ரி20 உலகக் கிண்ணத்தில் 200 ஓட்டங்கள் பெறப்படலாம். அவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு இலங்கை குழாத்தில் சுழல்பந்துவீச்சைப் பலப்படுத்தியுள்ளோம்.

'அணித் தலைவர் வனிந்து ஹசரங்க, மஹீஷ் பத்திரண ஆகிய இருவரும் பிரதான சுழல்பந்துவீச்சாளர்களாக அணியில் இடம்பெறுவர். அத்துடன் கமிந்து மெண்டிஸ், உதவி அணித் தலைவர் சரித் அசலன்க ஆகியோரையும் இம்முறை சுழல்பந்துவீச்சில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

வேகப்பந்துவீச்சுப் பற்றி பேசிய அவர்,  

வேகப்பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசக்கூடிய நுவன் துஷார ஆரம்பத்தில் 2 ஓவர்களையும் கடைசியில் 2 டெத் ஓவர்களையும் வீசுவார். அதேபோன்று மதீஷ பத்திரண இடையிலும் கடைசியிலும் பந்துவீசுவார். அவர்களை விட ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகியோரும் வேகபந்துவீச்சாளர்களாகப் பயன்படுத்தப்படுவர்.

'இலங்கை குழாத்தில் ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா ஆகிய 3 சகலதுறை வீரர்கள் இணைத்துக்  கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால், தனஞ்சய டி சில்வாவை விட மற்றைய இருவரும் அனுபவத்துடன் கூடிய சகலதுறை வீரர்கள் என்பதால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்' என்றார்.

மேலும், தெரிவுக் குழவினர், அணித் தலைவர், பயிற்றுநர் குழாத்தினர், அணி முகாமைத்துவ அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக கலந்தாலோசித்த பின்னரே ரி20 உலகக் கிண்ணத்திற்கான 15 வீரர்களை தெரிவுசெய்தோம். இதில் எவ்வித பாரபட்சமும் நிகழவில்லை எனவும் உப்புல் தரங்க குறிப்பிட்டார்.

விஜயகாந்த் வியாஸ்காந்த் பயணிக்கும் பதில் வீரராக பெயரிடப்பட்டது குறித்து அஜன்த மெண்டிஸிடம் கேட்டபோது,

'எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் வியாஸ்காந்திடம் இருக்கிறது. மேற்கிந்தியத் தீவுகளின் மைதான சூழ்நிலைகளுக்கு மிகவும் பொறுத்தமானவர் அவர். அவரது உயரம், மற்றும் சுழற்சியுடன் பந்தை வீசும் வேகம் என்பன அக்கில தனஞ்சய, ஜெவ்றி வெண்டர்சே ஆகியோரைவிட சிறந்ததாகும். அதனால்தான் அவரை பயணிக்கும் பதில் வீரர்களில் இணைத்துக்கொண்டோம்' என்றார்.

No comments