Vettri

Breaking News

மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புள்ளி முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டு உரிய புள்ளிகளை வழங்குவதற்கு நடவடிக்கை !!!






கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாட வினாத்தாள் தொடர்பில் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புள்ளி முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டு உரிய புள்ளிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

விஞ்ஞான பாட வினாத்தாளில் இடம்பெற்றுள்ள தவறுகள் தொடர்பில் சிக்கல்கள் எழுந்துள்ளதையடுத்து அந்த வினாத்தாள்களைத் தயாரித்த விரிவுரையாளர்களை அழைத்து நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுசில் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேற்படி விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடை க்கான வினாக்கள் வேளையில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் சுசில், இயல்பாகவே அனைத்து பரீட்சைகளிலும்

வினாத்தாள் வழங்கும் இறுதி சந்தர்ப்பத்தில் மாதிரி மார்க்கிங் இடம்பெறுவதன்படி சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளின் தரத்தை உறுதி செய்வது அவசியமென்றும் அதன்படி வினாத்தாள் தயாரிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ரோஹிணி கவிரத்ன எம்பி தமது கேள்வியின் போது;

பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து விஞ்ஞான பாடத்துக்கு 12 புள்ளிகளைக் கொண்ட வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கற்பிக்காத பாடத்திலிருந்து கேள்வி கேட்கும் போது பரீட்சார்த்திகள் எவ்வாறு பதிலளிப்பார்கள்? இவ்விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரன தரப் பரீட்சை தற்போது நடைபெறுகிறது. கொவிட்19 பெருந்தொற்று காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. பாடத்திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்யாத காரணத்தால் ஒருசில பாடப் பிரிவுகள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தன.

அவ்வாறு நீக்கப்பட்ட சில பிரிவுகளிலிருந்து இம்முறை விஞ்ஞான பாடத்துக்கான கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஒருசில கேள்விகளுக்கு விடை இல்லை. இன்னும் சில கேள்விகள் மிகுந்த முரண்பாட்டுடன் காணப்பட்டுள்ளன. அதனால் பரீட்சார்த்திகள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவித்தார். அதற்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

No comments