Vettri

Breaking News

ருத்துராஜ் துடுப்பாட்டத்திலும் தேஷ்பாண்டே பந்துவீச்சிலும் அசத்தல்; சென்னையிடம் பணிந்தது ஹைதராபாத்





 சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) இரவு நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 46ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 78 ஓட்டங்களால் மிக இலகுவாக சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றிகொண்டது.

ருத்துராஜ் கய்க்வாட், டெரில் மிச்செல் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், ஷிவம் டுபேயின் வழைமையான அதிரடி, துஷார் தேஷ்பாண்டேயின் 4 விக்கெட் குவியல், மதீஷ பத்திரணவின் துல்லியமான பந்துவீச்சு என்பன சென்னை சுப்பர் கிங்ஸை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

ஒட்டுமொத்தத்தில் இப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் சகலதுறைகளிலும் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தது.

களத்தடுப்பில் டெரில் மிச்செல் 5 பிடிகளை எடுத்து அசத்தினார்.

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில்  சென்னை சுப்பர் கிங்ஸ்  3ஆம் இடத்திற்கு முன்னேறியதுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 212 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீரர் அஜின்கியா ரஹானே மாத்திரமே துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினார். அவர் 3ஆவது ஓவரில் 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

ஆனால், அணித் தலைவரும் மற்றைய ஆரம்ப வீரருமான ருத்துராஜ் கய்க்வாட், டெரில் மிச்சில் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 52 பந்துகளில் 107 ஓட்டங்களைப் பகிர்ந்து எதிரணிக்கு சோதனையைக் கொடுத்தனர்.

டெரில் மிச்சில் 32 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து ருத்துராஜ் கய்க்வாடும் ஷிவம் டுபேயும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 35 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ருத்துராஜ் கய்க்வாட் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்திசெய்ய முயற்சித்து  98 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

54 பந்துகளை எதிர்கொண்ட ருத்துராஜ் கய்க்வாட் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களை விளாசினார்.

ஷிவம் டுபே ஒரு பவுண்டறி, 4 சிக்ஸ்கள் உட்பட 39 ஓட்டங்களுடனும் எம்.எஸ். தோனி 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

213 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது துடுப்பாட்டத்தை அதிரடியாக ஆரம்பித்த போதிலும் 2ஆவது ஓவரின் கடைசி 2 பந்துகளில் ட்ரவிஸ் ஹெட் (15), அம்மோல்ப்ரீத் சிங் (0) ஆகிய இருவரையும் துஷார் தேஷ்பாண்டே களம் விட்டு வெளியேற்றினார்.

தொடர்ந்து நான்காவது ஓவரில் மீண்டும் தேஷ்பாண்டேயின் பந்துவீச்சில் அபிஷேக் ஷர்மா 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (40 - 3 விக்.)

அத்ன பின்னர் நிட்டிஷ் குமார் ரெட்டி, ஏய்டன் மாக்ராம் ஆகிய இருவரும் அணியின் வீழ்ச்சியைத் தடுப்பதற்கு முயற்சித்தனர். ஆனால் இருவரும் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (85 - 5 விக்.)

நிட்டிஷ் குமார் ரெட்டி 15 ஓட்டங்களுடனும் ஏய்டன் மாக்ராம் 32 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

மதீஷ பத்திரண வீசிய அருமையான யோக்கர் பந்து மாக்ராமின் நடு விக்கெட்டை பதம் பார்த்தது.

ஹென்றிச் க்ளாசன் 20 ஓட்டங்களையும் அப்துல் சமாத் 19 ஓட்டங்களையும் பெற்று அணியை மீட்க முயற்சித்தனர். ஆனால், அவர்கள் இருவரும் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க சன்ரைஸ் ஹைதராபாத்துக்கு எல்லாம் முடிந்துவிட்டது.

பின்வரிசையில் அணித் தலைவர் பெட் கமின்ஸ் உட்பட எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொடவில்லை.

பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 3 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் முஸ்தாபிஸுர் ரஹ்மான் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

No comments