புதிய தலைவரின் தலைமையுரையை செவிமடுக்க பலரும் காத்திருப்பு ; தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துமாறும் சுமந்திரன் வேண்டுகோள்!!
இலங்கை தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டை காலம் தாழ்த்தாது நடத்துமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பிரதி பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறிதரனுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தேசிய மாநாட்டையொட்டி கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தனது கடிதத்தில் விரிவாக விளக்கிக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், 28 ஆம் திகதி நடைபெறவிருந்த பொது நிகழ்வு தவறான ஆலோசனையின் பேரிலும் கலந்துரையாடல் இன்றியும் அதிகாரமற்றும் சட்டத்திற்கு முரணான அறிவிப்பினாலும் துரதிர்ஷ்டவசமாக பிற்போடப்பட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட தலைவர் என்ற அடிப்படையில், பதவியேற்வு விழா வைபவ ரீதியாக நடைபெற வேண்டியது முக்கியமானது.
புதிய தலைவரின் தலைமையுரையை செவிமடுக்க பலரும் காத்திருப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறிதரனுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காலம் தாழ்த்தாது பகிரங்க பொது நிகழ்வை நடத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments