Vettri

Breaking News

கல்வித்திட்ட மாற்றமும், அதிக சம்பளத்தில் ஆசிரியர்களை நியமிப்பதன் மூலமுமே வினைத்திறனான சமூகத்தை உருவாக்க முடியும் : கிழக்கின் கேடயத்தின் தலைவர் எஸ்.எம்.சபீஸ்!!
















நூருல் ஹுதா உமர் 


நமது நாட்டின் கல்வி முறை தொழிலாளர்களை உருவாக்குகின்றதே தவிர தொழில் வழங்குனர்களை உருவாக்கவில்லை. அதற்கு பிரதான காரணம் நமது கல்விமுறையாகும். படைப்பாற்றல் அற்ற பாடமாக்கும் கல்விமுறை தற்காலத்துக்கு பொருந்தாது என அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், அனைத்துப்பள்ளிவாசல் சம்மேளன முன்னாள் தலைவருமான கிழக்கின் கேடயத்தின் தலைவர் எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார். 


பாலமுனை தோழமை அமைப்பின் ஏற்பாட்டில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் கவிஞர் வை.எம்.அசாம் தலைமையில் இன்று இடம் பெற்ற போது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சபீஸ் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது, 


ஆரம்ப கல்வியில் இருந்தே குழந்தைகளை படைப்பாற்றல் சக்தி கொண்டவர்களாக வெளிநாடுகளில் காணப்படுவது போன்ற கல்விமுறைகளுக்கு நாம் மாற்ற வேண்டும். அர்ப்பணிப்புக்கள் நிறைந்த ஆசிரியர் சேவை போற்றத்தக்கது. ஒருநாட்டின் உயர்வு ஆசிரியர்களின் கைகளிலையே தங்கியுள்ளது. ஆனால் சிறிய சம்பளத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டங்களைக் கொண்டவர்களை  ஆசிரியர்களாக நியமிக்கமுடியுமா? ஒருகாலமும் முடியாது. ஆகவேதான் அதிக சம்பளத்தில் ஆசிரியர்களை நியமிப்பதன் மூலமுமே வினைத்திறனான சமூகத்தை உருவாக்க முடியும். மட்டுமின்றி தற்காலத்திற்கு ஏற்றவகையில் கல்வித்திட்டத்திலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார் 


இந்நிகழ்வில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கெளரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஏ.எச்.றிபாஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் பிரதித் தவிசாளர் எஸ்.எம்.எம்.ஹனிபா, அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஏ.பி.பதூர்தீன், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.எம்.எம்.றிபாஸ்தீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  பாலமுனை அமைப்பாளர் ஏ.எல்.அலியார், சமூக செயற்பாட்டாளர் எம்.ஐ.எம்.அர்ஷாத், ரைஸ்டார் விளையாட்டு கழகத்தின் தலைவர் ஆசிரியர் ஏ.எல்.பாயீஸ்,  பிரதேச செயலக கணக்காளர் எப்.எம்.பர்ஹான் உட்பட அதிகாரிகள், ஆசிரியர்கள் விளையாட்டு கழகங்களின் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

No comments