Vettri

Breaking News

மலையக அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் நுவரெலியாவில் பல்கலைக்கழகமொன்றை நிறுவ திட்டம்!





 அரச பணியாளர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 10 ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் என்ற வகையில் அடுத்த வருடத்துக்கான பாதீட்டு திட்ட யோசனைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று முன்வைத்தார்.

நுவரெலியாவில் பல்கலைக்கழகமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, மேலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படவுள்ள அதேவேளை, அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைக்காக 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள பொது வசதிகளை மேம்படுத்துவதற்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

சமூக பாதுகாப்பு வேலைத்திட்டத்துக்காக கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 3 மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது.

விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு 7 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.

பதுளை பொது வைத்தியசாலைக்கு இருதயம் மற்றும் நுரையீரல் இயக்கமீட்பு பிரிவொன்றை நிறுவுவதற்கு 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

அத்துடன், நன்னீர் மீன்பிடித் தொழிலின் அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது. வடக்கு கடற்பகுதிகளில் மீன்பிடி வசதிகளை மேம்படுத்துவதற்கு 500 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் சேரி குடியிருப்பு பகுதிகளில் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுக்க இலவசமாக இடம் வழங்கப்படவுள்ளது.

பால் உற்பத்தி அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 53 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்புக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு, அடுத்த வருடத்துக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு மேலும் ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

ஹிங்குருகொட பகுதியில் சர்வதேச விமான நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது. பூநகரி நகரை அபிவிருந்தி செய்வதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

கடன் பெறும் எல்லையை 3900 பில்லியன் ரூபாவிலிருந்து 7 ஆயிரத்து 350 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதீட்டு உரையில் தெரிவித்துள்ளார்.

No comments