யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு குழப்பம் விளைவிக்க முயன்ற காவல்துறை!
யாழில் இன்று இடம்பெற்று வரும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை இடையூறு விளைவிக்கும் விதமாக காவல்துறையினர் செயற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாளான இன்று (26) யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அடை மழைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் நினைவிடத்தில் கூடி அஞ்சலி செலுத்தினர்.
மாற்று வீதி
நினைவிடத்தை அண்மித்த வீதியில் பெருமளவான மக்கள் காணப்பட்டமையால் , குறித்த வீதி ஊடாக வந்த வாகனங்களை மற்றைய மாற்று வீதியூடாக செல்ல அங்கிருந்த சிலர் வழி வகுத்தனர்.
அவ்வேளை அங்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை மக்கள் குவிந்துள்ள வீதி ஊடாகவே மேற்கொள்ளுமாறு வாகன சாரதிகளுக்கு பணித்ததுடன், அங்கிருந்து போக்குவரத்து ஒழுங்குகளை செய்த இளைஞர்களையும் அவ்விடத்தில் இருந்து அச்சுறுத்தி அகற்றியுள்ளனர்.
எனினும் பெரும்பாலான சாரதிகள் தாங்களாகவே அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் வீதியை தவிர்த்து மாற்று வீதி வழியாக தமது பயணத்தை மேற்கொண்டனர்.அதேவேளை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை தடை செய்ய கோரி யாழ்.நீதவான் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை (18) யாழ்ப்பாண காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மறுநாள் நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டது.
வன்முறை
அதனை அடுத்து புதன்கிழமை விசேட ஹெலியில் யாழ்ப்பாணம் வந்த சட்டமா அதிபர் திணைக்களத்தை சேர்ந்த அரச சட்டவாதிகள் உள்ளிட்ட விசேட குழு நினைவேந்தலை தடை செய்ய கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தது.அதனையும் மறுநாள் யாழ்.நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்தது.
அதன் போது , குற்றச்செயல்கள் வன்முறைகள் இடம்பெற்றால் அவற்றை கட்டுப்படுத்தவும், அவ்வாறான செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தவும் காவல்துறையினரால் முடியும்.
அவ்வாறு இருக்கையில் நடக்க போகும் நிகழ்வில் அப்படியான சம்பவம் நடைபெறும் என கூறி தடை கோருவதனை ஏற்க முடியாது என மன்று கூறி இருந்த நிலையில், உணர்வு பூர்வமான நிகழ்வில் இளைஞர்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை வன்முறையில் ஈடுபட வைக்கும் முயற்சியில், இன்றையதினம் காவல்துறையினர் நினைவேந்தலை குழப்பும் விதமான செயற்பாட்டில் ஈடுபட்டு இருந்தனர் என அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
No comments