Column Left

Vettri

Breaking News

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி அநுர அறிவிப்பு!




முந்தைய அரசாங்கங்களால் தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 11ஆம் திகதி இப்பாகமுவ பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் முன்னைய அரசாங்கங்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களில் உள்ள சில நிபந்தனைகள், எரிபொருள் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்திற்குத் தடையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். சில தனியார் நிறுவனங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கையிருப்பில் இருந்தபோதிலும், விலையை அதிகரிக்காத வரை விற்பனை செய்ய மறுப்பதாக ஜனாதிபதி குற்றஞ்சாட்டினார். குறித்த நிறுவனங்கள் சந்தைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் காரணமாக, அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும், எனவே அந்த ஒப்பந்தங்கள் திருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தனியார் எரிபொருள் நிறுவனங்களில் ஒன்று டீசல் லீற்றருக்கு 132 ரூபாவும், மற்றொரு நிறுவனம் 116 ரூபாவும் விலை அதிகரிப்பைக் கோரியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விலை அதிகரிப்பு லீற்றருக்கு 10 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நுகர்வோருக்கான மானியங்கள் தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய ஒப்பந்தங்களின் கீழ் தனியார் நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் விலையில் எரிபொருளை விற்பனை செய்ய முடியும் என்றும், அதேவேளை அரசாங்கம் நிர்ணயித்த விலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்து எரிபொருளை விற்பனை செய்யும் என்றும் ஜனாதிபதி கூறினார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நாட்டின் டீசல் சந்தையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பங்கு 77 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், எஞ்சிய 23 சதவீத தேவையைத் தனியார் நிறுவனங்களால் பூர்த்தி செய்ய முடியாவிட்டால், அதனையும் அரசாங்கமே பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

No comments

Subscribe Us