அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்குப் பெருவிழா நாளை ஆரம்பம்!!!!
11ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை பக்தி பூர்வமாக நடைபெறவுள்ள உற்சவம்; 18ஆம் திகதி திருக்கல்யாண வைபவம்!
அம்பாறை, அக்கரைப்பற்று | ஒக்டோபர் 10
இந்துமா சமுத்திரத்தின் முத்தாம் இலங்காபுரியின் கிழக்கே, அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மண்ணில் கோயில்கொண்டு, தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருச்சடங்குப் பெருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை (11.10.2026) பக்திபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.
ஆன்மிகச் சிறப்புமிக்க இவ்வுற்சவம் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி புதன்கிழமை வரை தொடர்ந்து நடைபெறவுள்ளதுடன், பல்வேறு விசேட பூசைகள், அபிஷேக ஆராதனைகள், பவனிகள் மற்றும் பாரம்பரிய உற்சவக் கிரியைகளும் இடம்பெறவுள்ளன.
🌺 நாளை கணபதி ஹோமத்துடன் ஆரம்பம்!
சித்திரை நட்சத்திரமும் சுபமுகூர்த்தமும் கூடிய நன்னாளில் நாளை இடம்பெறவுள்ள கணபதி ஹோமத்துடன் வருடாந்த திருச்சடங்குப் பெருவிழா ஆரம்பமாகும்.
அன்றைய தினம் இரவு 7.21 மணிக்கு அம்மனின் திருக்கதவு திறக்கப்பட்டு, விசேட அபிஷேக ஆராதனைகளுடன் உற்சவக் கிரியைகள் ஆரம்பமாகவுள்ளன.
🗓️ முக்கிய உற்சவ நிகழ்வுகள்
🔸 ஒக்டோபர் 12, 13ஆம் திகதிகள் – அபிஷேக ஆராதனைகள்
இரு தினங்களிலும் அம்மனுக்கு விசேட அபிஷேக அலங்காரப் பூசைகளும் ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன.
🔸 ஒக்டோபர் 14ஆம் திகதி – மாவிளக்குப் பூசை
புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு மாவிளக்குப் பூசை நடைபெறவுள்ளதுடன், தொடர்ந்து அபிஷேக அலங்காரப் பூசைகளும் அம்மனின் வெளிவீதி உலாவும் இடம்பெறவுள்ளன.
🔸 ஒக்டோபர் 15ஆம் திகதி – அம்மனின் வெளிவீதி உலா
வியாழக்கிழமை இரவு விசேட அபிஷேக அலங்காரப் பூசைகளைத் தொடர்ந்து அம்மனின் வெளிவீதி உலா நடைபெறவுள்ளது.
🔸 ஒக்டோபர் 16ஆம் திகதி – பாற்குட பவனியும் விசேட பூசைகளும்
வெள்ளிக்கிழமை காலை பாற்குட பவனி இடம்பெறவுள்ளதுடன், இரவு 'மக்கள் பூசாரி' நிகழ்வைத் தொடர்ந்து அம்மனுக்கு விசேட அபிஷேக அலங்காரப் பூசைகளும் வெளிவீதி உலாவும் நடைபெறவுள்ளன.
🔸 ஒக்டோபர் 17ஆம் திகதி – அலங்காரத் தோரணத்தில் அம்மன் பவனி
சனிக்கிழமை காலைப் பூசையைத் தொடர்ந்து அலங்காரத் தோரணத்தில் அம்மன் எழுந்தருளி, பிரதான வீதியூடாக ஊர்வலமாகச் சென்று ஆலயத்தை வந்தடைவார். தொடர்ந்து அபிஷேக ஆராதனைகளும் வெளிவீதி உலாவும் இடம்பெறவுள்ளன.
🔸 ஒக்டோபர் 18ஆம் திகதி – அம்பாளின் திருக்கல்யாண வைபவம்
ஞாயிற்றுக்கிழமை கல்யாணக்கால் நடுதல் மற்றும் அம்பாளின் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்வைபவம் உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அமையவுள்ளது.
🔸 ஒக்டோபர் 19ஆம் திகதி – சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா
திங்கட்கிழமை அபிஷேக அலங்காரப் பூசைகளைத் தொடர்ந்து, அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பிரதான வீதியூடாக வீதியுலா வரவுள்ளார்.
🔸 ஒக்டோபர் 20ஆம் திகதி – திருவேட்டை உற்சவம்
செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு அம்மன் திருவேட்டைக்குப் புறப்பட்டு சமுத்திரக் கரையைச் சென்றடைவார். அங்கு சக்தி கரகம் பாடுதல் மற்றும் விசேட பூசைகள் இடம்பெறவுள்ளன.
🔸 ஒக்டோபர் 21ஆம் திகதி – மஞ்சள் குளிப்புடன் நிறைவு
புதன்கிழமை காலை மஞ்சள் குளிப்பு நிகழ்வைத் தொடர்ந்து விசேட வைபவங்களும் பூசைகளும் இடம்பெற்று, வருடாந்த திருச்சடங்குப் பெருவிழா நிறைவுபெறவுள்ளது.
🪔 ஒக்டோபர் 27, 28ஆம் திகதிகளில் எட்டாம் சடங்கு வைபவம்
இவ்வாலயத்தின் எட்டாம் சடங்கு வைபவம் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு ஆரம்பமாகி, 28ஆம் திகதி புதன்கிழமை காலை நீக்குமிழும், பால் வார்த்தல் மற்றும் பொங்கல் பூசைகளுடன் நிறைவுபெறவுள்ளது.
🙏 குருமார்களின் தலைமையில் உற்சவக் கிரியைகள்
இவ்வருடாந்த திருச்சடங்குப் பெருவிழாவின் அனைத்து உற்சவக் கிரியைகளும் ஆலய உற்சவ பிரதம குரு விஸ்வப்பிரம்மஸ்ரீ த. தினேஷ்காந்தன் ஐயா, உற்சவ கால குரு விஸ்வப்பிரம்மஸ்ரீ செ. நிரேஜன் ஐயா, நித்திய குரு விஸ்வப்பிரம்மஸ்ரீ வே. மேகராஜா ஐயா மற்றும் உதவி குரு விஸ்வப்பிரம்மஸ்ரீ நா. கேதீஸ்வரன் ஐயா ஆகியோரால் நடாத்தி வைக்கப்படவுள்ளன.
அம்பாளின் அருளைப் பெற்றுக்கொள்ளும் ஆன்மிகப் பெருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு, அம்மனின் திருவருளையும் அருளாசியையும் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜே.கே.யதுர்ஷன்
செய்தியாளர்
No comments