Column Left

Vettri

Breaking News

வளத்தாப்பிட்டி சந்தையை மீள ஆரம்பிக்கும் பிரேரணை நிறைவேற்றம்; மலசலகூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரிக்கை! நவம்பரில் சந்தையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு உறுப்பினர் வி. ஜெயச்சந்திரன் வலியுறுத்தல்!!!




(தில்சாத் பர்வீஸ்) வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் நீண்டகாலமாகப் பயன்பாடின்றிக் காணப்படும் சந்தையை மீள ஆரம்பிப்பதற்கும், அதற்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் முன்வைக்கப்பட்ட பிரேரணை சம்மாந்துறை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 16ஆவது அமர்வில், கடந்த 15ஆம் திகதி உறுப்பினர் வி. ஜெயச்சந்திரன் இந்தப் பிரேரணையை முன்வைத்தார். சந்தையை எதிர்வரும் நவம்பர் மாதம் மீள ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார். சுமார் 30 ஆண்டுகளாக உரிய முறையில் பயன்படுத்தப்படாமல் காணப்படும் இச்சந்தையில் தற்போது இரண்டு கடைகள் ஆரம்பிக்கப்பட்டு ஓரளவு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும், சந்தையை முழுமையாகச் செயற்படுத்துவதற்கான அடிப்படை வசதிகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை என உறுப்பினர் சுட்டிக்காட்டினார். வளத்தாப்பிட்டி பிரதேச மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக அம்பாறை, கல்முனை மற்றும் சம்மாந்துறை போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாகவும், உள்ளூர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான நிரந்தரச் சந்தை வசதியை ஏற்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். சந்தையில் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகள் காணப்படுகின்ற போதிலும், மலசலகூட வசதி இல்லாததால் வியாபாரிகளும் சந்தைக்கு வருகை தருவோரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார். எனவே, சந்தையை மீள ஆரம்பிப்பதற்கு முன்னதாக மலசலகூடமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அத்துடன், கற்பாறைகள் நிறைந்து மேடு பள்ளங்களுடன் காணப்படும் சந்தை வளாகத்தைப் பிரதேச சபையின் ஜே.சி.பி. இயந்திரத்தைப் பயன்படுத்திச் சமப்படுத்தி, மக்கள் மற்றும் வாகனங்கள் இலகுவாகச் சென்றுவரக்கூடிய வகையில் சீரமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சந்தைக்கு அண்மையிலுள்ள பிரதான வீதிப் பகுதியில் காணப்படும் முள்கம்பிகளை அகற்றி, வாகனங்கள் சந்தைக்குள் சென்று வருவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதுடன், சந்தையின் முன்பகுதியில் வடிகான் அமைப்பதற்குத் தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் கோரினார். இதற்கான நிதி உடனடியாகக் கிடைக்காத பட்சத்தில், வேறு இடங்களில் பயன்பாடின்றிக் காணப்படும் குழாய்களைப் பயன்படுத்தி வடிகால் வசதியை ஏற்படுத்துவது குறித்தும் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டார். சந்தையை மீள ஆரம்பிப்பது தொடர்பாகத் தாம் ஏற்கனவே பல தடவைகள் சபையில் கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இம்முயற்சி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய மற்றும் ஏனைய பொருட்களை உள்ளூரிலேயே விற்பனை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றார். இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து, பிரதேசத்தின் பொருளாதார நடவடிக்கைகளையும் மேம்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். எனவே, எதிர்வரும் நவம்பர் மாதம் சந்தையை மீள ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் மலசலகூடம், வடிகான், சந்தை வளாகத்தைச் சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு சபையின் அனைத்து உறுப்பினர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் உறுப்பினர் வி. ஜெயச்சந்திரன் வலியுறுத்தினார்.

No comments

Subscribe Us