யாழ். பட்டமளிப்பு விழாவில் நெகிழ்ச்சியான தருணம்! மறைந்த மாணவிக்கு பட்டம் வழங்கி கௌரவம்....!!!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பட்டமளிப்பு விழாவின் இறுதி அமர்வில், காலமான மாணவி ஒருவருக்கு பட்டம் வழங்கிக் கௌரவித்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பட்டை கிராமத்தைச் சேர்ந்த அமரர் பிரேமதாசன் நிதுர்ஜிகா என்ற மாணவிக்கே பரதநாட்டியத்தில் சிறப்புக் கலைப் பட்டம் வழங்கப்பட்டது.
மாணவி உயிரிழந்திருந்த போதிலும், அவர் தனது கல்விப் பயணத்தில் ஈட்டிய சாதனையை அங்கீகரிக்கும் வகையில் இப்பட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவரது கல்விச் சாதனையையும் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் வகையில், பட்டமளிப்பு விழா அரங்கில் இருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று (Standing Ovation) மரியாதை செலுத்தினர்.
மறைந்த மாணவியின் கல்வி அடைவுக்கு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம், பட்டமளிப்பு விழாவின் உணர்வுபூர்வமான தருணங்களில் ஒன்றாக அமைந்ததுடன், அங்கிருந்தவர்களின் மனங்களிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
மரணத்தால் ஒரு மாணவியின் பயணம் முடிவடைந்தாலும், அவரது உழைப்பும் கல்விச் சாதனையும் மறக்கப்படவில்லை என்பதை உணர்த்தும் வகையில் இந்த நெகிழ்ச்சியான தருணம் அமைந்தது.
ஜே.கே.யதுர்ஷன்
தம்பிலுவில்
No comments