Column Left

Vettri

Breaking News

நிதி உதவித் திட்டம் முடிந்த பின்னரும் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு – சர்வதேச நாணய நிதியம் உறுதி!!!




விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைந்ததன் பின்னரும் இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ள சர்வதேச நாணய நிதியம், இருப்பினும் தற்போது எஞ்சியுள்ள மீளாய்வைப் பூர்த்திசெய்வதும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுமே முன்னுரிமைக்குரிய விடயங்களாக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பிராந்தியப் பொருளாதார நிலைவரம் தொடர்பான ஊடக சந்திப்பில் இலங்கை தொடர்பில் மேலும் கருத்துரைத்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான பிரதிப்பணிப்பாளர் சோனாலி ஜெயின் சந்ரா, தற்போது நடைமுறையில் உள்ள விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் முடிவுக்கு வந்ததன் பின்னர் புதியதொரு திட்டத்தைக் கோருவது என்பது அரசாங்கத்தின் தீர்மானத்தைப் பொறுத்ததாகும் என்று தெரிவித்துள்ளார். 'இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஆதரவளிப்பதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. அது புதிய நிதிவசதிச் செயற்திட்டமாக இருக்கலாம். அல்லது கண்காணிப்பு மற்றும் திறன் மேம்பாட்டின் அடிப்படையில் வழங்கப்படும் பரந்துபட்ட கொள்கை ஆலோசனைகளாக இருக்கலாம். இவற்றின் ஊடாக இலங்கை கணிசமானளவு நன்மை அடையும்' என்றும் அவர் எதிர்வுகூறியுள்ளார். 'எனவே இலங்கையின் விருப்பத்துக்கு அமைவாக எந்தவொரு வழியிலும் ஆதரவு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருக்கிறது என்றே நான் கூறுவேன். இது எதிர்வருங்காலங்களில் ஆராயப்படவேண்டிய விடயம் என்றாலும், இலங்கையின் மிகவும் வலுவான பங்காளியாக நாணய நிதியம் தொடர்ந்து திகழும்' எனவும் அவர் உறுதியளித்துள்ளார். மேலும், 'இம்மாதத் தொடக்கத்தில் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான ஏழாம் கட்ட மீளாய்வு குறித்து உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதுகுறித்து எதிர்வரும் வாரங்களில் இயக்குநர் சபை பரிசீலிக்கும். அதனைத்தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் இச்செயற்திட்டம் முடிவுக்கு வருவதற்கு முன்பதாக இறுதி மீளாய்வுக்காக எமது அதிகாரிகள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும். எனவெ தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பெரும்பாகப் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் முக்கிய மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுத்தல் என்பவற்றில் விசேட கவனம் செலுத்தவேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தினார்.

No comments

Subscribe Us