Column Left

Vettri

Breaking News

ஆபத்தான மின்கம்பங்கள், கழிவுநீர் பிரச்சினை; சம்மாந்துறை வைத்தியசாலை சேவைகள் குறித்தும் நடவடிக்கை கோரிக்கை!!




80,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் சம்மாந்துறையில், விசேட தேவையுடையோர், முதியோர், சிறுவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முறையான சுகாதாரச் சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தல் (தில்சாத் பர்வீஸ்) சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆபத்தான நிலையில் காணப்படும் மின் மற்றும் தொலைபேசிக் கம்பங்களை அகற்றுதல், வீடுகளிலிருந்து அனுமதியின்றி வடிகான்களில் கழிவுநீரை வெளியேற்றுவதைக் கட்டுப்படுத்துதல், சம்மாந்துறை வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான மருத்துவச் சேவைகளை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பான மூன்று பிரேரணைகள், சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 16ஆவது அமர்வில் உறுப்பினர் சித்தி நிலவ்பாவினால் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. சுமார் 80,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் சம்மாந்துறைப் பிரதேசத்தில் விசேட தேவையுடையோர், முதியோர், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஒழுங்கான சுகாதாரச் சேவைகள் கிடைக்க வேண்டியதன் அவசியத்தை உறுப்பினர் வலியுறுத்தினார். பிரதேசத்தில் உடைந்தும் சேதமடைந்தும் ஆபத்தான நிலையில் காணப்படும் மின் மற்றும் தொலைபேசிக் கம்பங்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், எதிர்வரும் மழைக்காலத்தில் நில அசைவுகள் காரணமாக இக்கம்பங்கள் மேலும் சேதமடையக்கூடும் என எச்சரித்தார். எனவே, ஆபத்தான கம்பங்களை அடையாளம் கண்டு அகற்றுவதற்காகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குப் பிரதேச சபையின் ஊடாகக் கடிதங்களை அனுப்பி, உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரினார். அதேவேளை, வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை அனுமதியின்றிப் பாதையோர வடிகான்களில் விடுவதால் சுகாதாரப் பாதிப்புகளும் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். இவ்விடயம் ஏற்கனவே சபையில் எடுத்துரைக்கப்பட்டுள்ள போதிலும், சில வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தொடர்பில் விசாரிக்கும்போது அதனை மழைநீர் எனக் கூறுவதாகவும் குறிப்பிட்டார். இத்தகைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளைச் சபை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதேவேளை, சம்மாந்துறை வைத்தியசாலையில் நோயாளர்களுக்குக் கிடைக்கும் மருத்துவச் சேவைகள் தொடர்பிலும் அவர் கவலை வெளியிட்டார். கடந்த மாதம் 17ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளி ஒருவருக்கு இரண்டு தடவைகள் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரது உடல்நிலை குறித்து உரிய கவனம் செலுத்தப்படவில்லை எனக் குடும்பத்தினர் தெரிவித்ததாகவும் சபையில் குறிப்பிட்டார். குறித்த நோயாளியின் மகன் தனது தந்தையைப் பரிசோதிக்குமாறு வைத்தியரிடம் கோரியபோது, அவர் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதாகவும், பின்னர் தந்தை சுயநினைவின்றி இருப்பதை அவதானித்த மகன், அவரை வேறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லத் தீர்மானித்ததாகவும் உறுப்பினர் தெரிவித்தார். சம்மாந்துறை வைத்தியசாலையிலிருந்து அம்பாறை வைத்தியசாலை சுமார் 17 கிலோமீற்றர் தொலைவிலும், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை சுமார் 7 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அவசர மருத்துவத் தேவைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நோயாளர்களுக்குத் தாமதமின்றி உரிய சிகிச்சைகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கும் சுகாதார அமைச்சருக்கும் பிரதேச சபையின் ஊடாகக் கடிதங்களை அனுப்பி, உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், வைத்தியசாலைக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொடுக்கச் சபை உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். பொதுமக்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் மருத்துவச் சேவைகளின் தரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளும் சபையில் நிறைவேற்றப்பட்டன.

No comments

Subscribe Us