Column Left

Vettri

Breaking News

மல்வத்தையில் இருமாடிச் சந்தைக் கட்டடம் மற்றும் கலாசார மண்டபம் அமைக்க பிரேரணைகள் ஏகமனதாக நிறைவேற்றம்.!!!




(தில்சாத் பர்வீஸ்) சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட மல்வத்தையில் உள்ள பயன்பாடற்ற சந்தைப் பகுதியை அபிவிருத்தி செய்து இருமாடிச் சந்தைக் கட்டடமொன்றை அமைப்பதற்கும், மல்வத்தை உப பிரதேசசபை அலுவலக வளாகத்தில் பொதுக் கலாசார மண்டபமொன்றை நிர்மாணிப்பதற்கும் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 16ஆவது அமர்வில், பிரதேச சபை உறுப்பினர் எஸ். டனோஐன் இப்பிரேரணைகளை முன்வைத்தார். தற்போது முறையாகப் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படும் சந்தைப் பகுதியை அபிவிருத்தி செய்து, நவீன வசதிகளுடன் கூடிய இருமாடிச் சந்தைக் கட்டடமொன்றை அமைத்து, கடைகளை வாடகைக்கு வழங்குவதன் மூலம் பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்க முடியும் எனப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், இத்திட்டத்தின் ஊடாக உள்ளூர் வியாபாரிகளின் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதோடு, இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கவும் முடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இதேவேளை, மல்வத்தை மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் கலாசார மற்றும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், போதிய வசதிகளுடன் கூடிய பொதுக் கலாசார மண்டபமொன்றை அமைப்பதற்கான பிரேரணையும் முன்வைக்கப்பட்டது. குறித்த மண்டபத்தின் மூலம் திருமண நிகழ்வுகள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் சமூகக் கூட்டங்களை நடத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த முடிவதுடன், பல்வேறு சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்த முடியும் என பிரேரணையில் குறிப்பிடப்பட்டது. மேலும், இரு திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கான செலவு மதிப்பீடுகளைத் தயாரித்து, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் அவற்றைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. சந்தைக் கட்டடத்தின் ஊடாக பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிப்பதும், கலாசார மண்டபத்தின் மூலம் மக்களின் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் இப்பிரேரணைகளின் முக்கிய நோக்கங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன.

No comments

Subscribe Us