Column Left

Vettri

Breaking News

நுரைச்சோலை, பனையடி களப்பில் சிக்கிய பேரழிவை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட வலைகள்!!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) புத்தளம் மற்றும் கற்பிட்டி களப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக மீன் வளம் அருகிவருவதாகக் கூறப்படும் புகார்களுக்கு மத்தியில், கற்பிட்டி களப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாரியளவிலான தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைத் தொகுதியொன்றை புத்தளம் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இக்களப்புப் பகுதியில் மீன் பெருக்கம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதற்கு சட்டவிரோத மீன்பிடி முறைகளே மூலக்காரணம் என பலதரப்பிலிருந்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இத்தீவிர சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. நுரைச்சோலை முதல் பனையடி வரையான கடற்கரை பிரதேசங்களை மையப்படுத்தி திங்கட்கிழமை (05) அதிகாரிகள் திடீர் கள ஆய்விலும் சோதனையிலும் இறங்கினர். களப்பு நீரின் ஆழப் பகுதிகளில் சட்டவிரோதமாக விரிக்கப்பட்டிருந்த 95 கூண்டு வலைகளும், 08 தங்குஸ் வலைத் தொகுதிகளும் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டதுடன் அவைகள் முழுமையாக அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டன. கூட்டு வலைகள் மற்றும் தங்குஸ் வலைகளின் பயன்பாடு முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதன் பின்னணியில் மிக மோசமான சூழலியல் அழிவு ஒளிந்துள்ளது. இத்தகைய பொறிகளில் மிகச் சிறிய குஞ்சு மீன்கள் கூட தப்பியோட முடியாமல் சிக்கி உயிரிழப்பதால், களப்பின் மீன் பெருக்கம் அடியோடு அழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. புத்தளம் மற்றும் கற்பிட்டி களப்பு எல்லைகளில் தற்போது நிலவும் கடுமையான மீன் தட்டுப்பாட்டுக்கு, இயற்கைச் சூழலைச் சீரழிக்கும் இத்தடைசெய்யப்பட்ட வலைகளின் பாவனையே பிரதான காரணம் என களப்பு மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடக் கூடாது என அப்பகுதி மக்களுக்குக் கடற்றொழில் அதிகாரிகளால் தொடர்ச்சியாகப் பல விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வந்துள்ளன. இருப்பினும், சட்டத்தையும் அறிவுறுத்தல்களையும் துளியும் பொருட்படுத்தாமல் திட்டமிட்ட சில குழுக்கள் தொடர்ந்தும் இந்த நாசகாரத் தொழிலில் இரகசியமாக ஈடுபட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது. இச்சோதனையின்போது சந்தேகநபர்கள் எவரும் சம்பவ இடத்தில் சிக்காத போதிலும், தொடர்புடையவர்களை அடையாளம் காணும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புத்தளம் உதவி கடற்றொழில் பணிப்பாளர் டி.எம்.அசந்த தென்னகோனின் வழிகாட்டலில், கடற்றொழில் பரிசோதகர்களான மதுஷான் யசரத்ன, அமில ஷானக மற்றும் நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட்களான லலித் குணவர்தன (41364), கே.ஏ.பி. தர்மசிறி (59872) ஆகியோர் இணைந்து இக் களப்புச் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments

Subscribe Us