Column Left

Vettri

Breaking News

அனோஜனின் மரண தண்டனையைக் குறைத்து, கருணை வழங்கவும்! கனடா-கல்முனை பிராந்திய இணையம் மனிதாபிமான வேண்டுகோள். கனடாவிலிருந்து சவூதிக்கு நேரடி அஞ்சல்!!!!




( வி.ரி.சகாதேவராஜா) சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கல்முனை நற்பிட்டிமுனை தமிழ் இளைஞர் சிவராசா அனோஜனின் மரண தண்டனையைக் குறைத்து, கருணை வழங்க வேண்டும் என கனடா கல்முனை பிராந்திய இணையம் மனிதாபிமான வேண்டுகோளை சவூதி மன்னருக்கு கனடா சவூதி தூதரகம் ஊடாக விடுத்துள்ளது. கனடா கல்முனை பிராந்திய இணைய இயக்குனர் விசு கணபதிப்பிள்ளை இந்த அஞ்சலை இணையம் சார்பாக அனுப்பி வைத்துள்ளார். அதன் முழு விபரம் இதோ.. அஞ்சல் மேன்மைதங்கிய சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் அவர்கள், சவூதி அரேபிய தூதரகம், கனடா ஊடாக மேன்மை தங்கிய மன்னர், சவூதி அரேபிய இராச்சியம். மேன்மைதங்கிய மன்னர் அவர்களுக்கு, திரு. அனோஜன் சிவராஜாவிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைத்து, கருணை வழங்குமாறு கோரும் மனிதாபிமான வேண்டுகோள். கல்முனை பிராந்திய இணையம் கனடா சார்பாக, இலங்கைப் பிரஜையான திரு. அனோஜன் சிவராஜா தொடர்பாக இப்பணிவான வேண்டுகோளை தங்களது மேன்மைக்கு மிகுந்த மரியாதையுடன் முன்வைக்கின்றோம். சவூதி அரேபிய இராச்சியத்தின் இறையாண்மை, சட்ட அமைப்பு மற்றும் நீதித்துறையின் நடைமுறைகளை நாங்கள் முழுமையாக மதிக்கின்றோம். அதேவேளை, இவ்விடயம் தொடர்பில் மனிதாபிமான அடிப்படையிலும், இரக்கத்தின் அடிப்படையிலும் தங்களது கனிவான கவனத்திற்கு இவ்வேண்டுகோளைச் சமர்ப்பிக்கின்றோம். எமது உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி முகநூலில் அவதூறான கருத்தொன்றை வெளியிட்ட குற்றத்திற்காக திரு. அனோஜன் சிவராஜாவிற்கு ஆரம்பத்தில் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் மேன்முறையீட்டின் ஊடாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. இஸ்லாம் இரக்கம், மன்னிப்பு மற்றும் கருணையை உயர்வாகப் போற்றும் மார்க்கமாகும். புனித அல்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்: “அவர்கள் மன்னித்து, (குற்றங்களைப்) பொருட்படுத்தாமல் விட்டுவிடட்டும்; அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா?” — புனித அல்குர்ஆன், ஸூரத்துன் நூர் (24:22) மேலும், இஸ்லாமிய போதனைகளில் “ரஹ்மா” (கருணை), “மஃபிரா” (மன்னிப்பு) ஆகியவை முதன்மையான நற்பண்புகளாக வலியுறுத்தப்படுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித வாழ்க்கையிலும் மன்னிப்பு மற்றும் இரக்கத்தின் ஏராளமான முன்னுதாரணங்கள் காணப்படுகின்றன. சவூதி அரேபியா, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் இதயங்களில் மிகவும் உயர்ந்த புனித இடத்தைப் பெற்ற நாடாகும். மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களின் காவலராக விளங்கும் சவூதி அரேபியாவின் மனிதாபிமான நடவடிக்கைகள் உலக முஸ்லிம் சமூகத்தினால் என்றும் உயர்வாக மதிக்கப்படுகின்றன. எனவே, திரு. அனோஜன் சிவராஜாவிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை, சட்ட ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சாத்தியமான வரம்பிற்குள் குறைந்த தண்டனையாக மாற்றுவதற்கும், அவருக்குக் கருணை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களிடம் மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம். இந்த வேண்டுகோள் சவூதி அரேபிய நீதித்துறையின் சுதந்திரத்தையோ சட்டங்களையோ கேள்விக்குட்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக, இஸ்லாம் போதிக்கும் கருணை மற்றும் மனிதாபிமானத்தின் அடிப்படையில், ஒரு மனித உயிருக்கு மறுவாய்ப்பு வழங்குமாறு கோரும் பிரார்த்தனை பூர்வமான கோரிக்கையாகவே அமைகின்றது. அவருடைய குடும்பத்தினரின் சொல்லொணாத் துயரத்தையும் மனவேதனையையும் கருத்திற்கொண்டு, இந்த மரண தண்டனையை மறுபரிசீலனை செய்து தண்டனைக்குறைப்பு வழங்க தங்களது அன்புடன் பரிசீலிக்க வேண்டுகின்றோம். இவ்விடயத்தில் தாங்கள் காட்டும் மனிதாபிமான அணுகுமுறை, இலங்கை மக்களிடையிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரிடையிலும் ஆழ்ந்த நன்றியையும் மதிப்பையும் ஏற்படுத்தும் என நம்புகின்றோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியையும், நீதியையும், கருணையையும் அருள்வானாக. இவ்வண்ணம் கல்முனை பிராந்திய இணையம். கனடா

No comments

Subscribe Us