Column Left

Vettri

Breaking News

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு நிரந்தர கட்டடம் அமைக்க வேண்டும்- -அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய வலியுறுத்தல்!!!




(பாறுக் ஷிஹான்) video-https://fromsmash.com/CriE3V2Jee-dt அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தைத் தற்போதைய இடத்திலிருந்து வேறு பொருத்தமான இடத்திற்கு இடமாற்றி, அதற்கான நிரந்தரக் கட்டடமொன்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லா வலியுறுத்தினார். அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) நடைபெற்ற போதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார். கூட்டத்தில் இப் பிரச்சினை குறித்துக் காரசாரமாக உரையாற்றிய மாநகர முதல்வர், "அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கான நிரந்தரக் கட்டடம் வேறொரு பொருத்தமான காணியில் அமைக்கப்பட வேண்டும். தற்போது பொலிஸ் நிலையம் இயங்கி வரும் காணியானது அக்கரைப்பற்று மாநகர சபைக்குச் சொந்தமானதாகும். அக் காணி ஆரம்பத்தில் வாடகை அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருந்தது" என்பதைச் சுட்டிக்காட்டினார். அக்கரைப்பற்று நகரின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, அரசாங்கத்தின் நிலங்கள் மற்றும் வளங்கள் முறைப்படி பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் அங்கு விரிவாக எடுத்துரைத்தார். எனவே, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் கட்டடப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றைக் காண்பதற்குச் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த தரப்பினர் உடனடியாக முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லா முன்வைத்த இக் காரசாரமான கருத்துக்கள் அடங்கிய காணொளிக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் விசேட ஆராய்வு பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட செயலகத்தின் 'ஏ.ஐ. விக்கிரம' கேட்போர் கூட்ட மண்டபத்தில் நேற்று (01) இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான அனுபம மங்கள விக்கிரமாரச்சி ஏற்பாட்டில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ அவர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்று, மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். அப்துல் வாசித், அபூபக்கர் ஆதம்பாவா, சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர். மேலும், மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், பல்வேறு அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் இக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments

Subscribe Us