தம்பலாகாமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அவயங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் பொருத்தும் நிகழ்வு!!
(சேனையூர் நிருபர்)
திருகோணமலை , தம்பலாகாமம் பிரதேச செயலக பிரிவில் மாற்றுத் திறனாளி நபர்களுக்கான அவயங்கள் பொறுத்தும் நிகழ்வு இன்று(03) தம்பலாகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்றன.
தம்பலாகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் விசேட தேவையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான அவயங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் பொருத்தும் விசேட நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.
சமூக சேவைகள் திணைக்களம் (பத்தரமுல்ல) மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிதியம் (CDF) நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், விசேட தேவையுடைய மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை இனங்கண்டு, அவர்களின் அன்றாட வாழ்க்கையை இலகுவாக்கும் வகையில் தேவையான அவயங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் பொருத்தப்பட்டு வழங்கப்பட்டன.
மாற்றுத் திறனாளிகளின் சுயாதீனமான வாழ்க்கை, சமூகப் பங்கேற்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பயனாளிகளுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப எதிர்காலத்திலும் சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் நடப்பதற்கான செயற்கை கால்,சப்பாத்து உள்ளிட்ட உபகரணங்கள் சரிசெய்யப்பட்டு வழங்கப்பட்டன.
இதில் சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர் டி.பிரணவன்,சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் திட்ட உத்தியோகத்தர் அன்டன்,சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments