சாய்ந்தமருதில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் “அத்தம” செயற்றிட்டம் முன்னெடுப்பு!!!
( எம்.என்.எம்.அப்ராஸ் )
சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு வாரம் – 2026 ஆகியவற்றை முன்னிட்டு, சாய்ந்தமருது கடற்கரையோரப் பகுதியில் இன்று (19) விசேட கரையோர தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தூய்மையான இலங்கை செயலகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ், கடல் மற்றும் கடற்கரைச் சூழலைப் பாதுகாத்தல், கடற்கரை மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினரும் கரையோரப் பிரதேச செயலகத் ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஏ.ஆதம்பாவா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இக்கரையோர தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வின் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் ,சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் கே. எல். எம். ஹமீட் அம்பாறை மாவட்ட கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரி கே. சிவக்குமார் மற்றும் கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் (MEPA) உதவி கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரி எச். கே. எம்.ஜேம்சித் ஹாசான் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இலங்கை கடற்படை,இலங்கை பொலிஸ் திணைக்களம், சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் (MEPA) உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் மாநகர சபை ஊழியர்களும் பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கரையோரத் தூய்மைப்படுத்தல் பணியில் தமது முழுமையான பங்களிப்பை வழங்கினர்.
இதன்போது சாய்ந்தமருது கடற்கரையோரத்தில் காணப்பட்ட பல்வேறு வகையான கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அவை பொலித்தீன் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், உக்கக்கூடிய கழிவுகள் மற்றும் உக்காத கழிவுகள் என முறையாகத் தரம் பிரிக்கப்பட்டன. பின்னர் ஒவ்வொரு வகை கழிவுகளினதும் நிறை அளவிடப்பட்டு பதிவு செய்யப்பட்டதுடன், உரிய முறையில் அகற்றுவதற்காக அவை தனித்தனியாகச் சேகரித்து எடுத்துச் செல்லப்பட்டன. சேகரிக்கப்பட்ட கழிவுகள் முறையாகத் தரம் பிரிக்கப்பட்டு, அவற்றின் மொத்த நிறையும் வகை வாரியான நிறையும் பதிவு செய்யப்பட்ட பின்னர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய முறையில் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு கழிவுகளை வகைப்படுத்தி, அவற்றின் நிறையை அளவிட்டு பதிவு செய்து அகற்றியமை, கடற்கரை மாசுபாட்டின் தன்மை மற்றும் அளவைப் புரிந்துகொள்வதற்கும் எதிர்கால சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
கடற்கரை மற்றும் கடல் சூழல் மாசுபாட்டில் குறிப்பாக பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் முக்கிய பங்கு வகிப்பதுடன், அவை கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதனை கருத்திற்கொண்டு, கடற்கரைச் சூழலைத் தூய்மையாகப் பேணுவதுடன், கழிவுகளை பொறுப்புடன் கையாள்வதன் அவசியம் குறித்தும் இந்நிகழ்வின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் கடற்கரைப் பகுதிகளில் அதிகரித்து வரும் கடற்கரை மாசுபாட்டைத் தடுப்பதற்கும், கடல் வளங்கள் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் இவ்வாறான சமூகப் பங்களிப்புடனான செயற்றிட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. Clean Sri Lanka மற்றும் “அத்தம” தேசிய செயற்றிட்டங்களின் நோக்கங்களுக்கு அமைவாக, தற்போதைய கடற்கரைச் சூழலைத் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் பேணுவதுடன், எதிர்கால சந்ததியினருக்காக அழகானதும் ஆரோக்கியமானதுமான கடற்கரைச் சூழலைப் பாதுகாத்து வழங்குவதே இவ்வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது. பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும்கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இத்தூய்மைப்படுத்தல் நடவடிக்கை, “தூய்மையான கடற்கரை – பாதுகாக்கப்பட்ட கடல் – நிலையான எதிர்காலம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
No comments