Column Left

Vettri

Breaking News

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை- ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்கு ரிசாட் பதியுதீன் நிந்தவூரில் அதிரடி மறுப்பு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை!!!




(பாறுக் ஷிஹான்) ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது எனவும், அவரை தான் நேரில் கண்டதுமில்லை, பேசியதுமில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். "பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்" இச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: "ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. சஹ்ரானின் பயங்கரவாதச் செயற்பாடுகளை முஸ்லிம் சமூகமோ அல்லது முஸ்லிம் அரசியல் தலைமைகளோ ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. இத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என்பதில் முஸ்லிம் சமூகம் உறுதியாக உள்ளது. இப் பயங்கரவாதச் செயற்பாட்டினால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில், ஓர் அரசியல்வாதியாக நானும் கடுமையாகப் பாதிக்கப்பட்டேன். நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரு தேசியக் கட்சியின் தலைவராகவும் இருந்த என்னைக் கௌரவ சபாநாயகருக்குக் கூட அறிவிக்காமல் இரவோடு இரவாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கேன் அரசியல் உள்நோக்கத்தோடு முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் என் மீது முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, சில தமிழ் ஊடகங்கள் தமக்கு வேண்டியவாறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. சஹ்ரானுடன் எனக்கு எவ்விதப் தொடர்பும் இல்லை என்பதால், இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு எதிராகத் தயங்காமல் சட்ட நடவடிக்கை எடுப்பேன். ஈஸ்டர் தாக்குதல் குறித்து நேர்மையான மற்றும் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க முன்னெடுக்கப்படும் எந்தவொரு முறையான விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம்" என அவர் மேலும் குறிப்பிட்டார்

No comments

Subscribe Us