மூதூர் , தோப்பூர் பிரதேசத்தில் கடும் வறட்சி: கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை..!
(சேனையூர் நிருபர்)
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், தோப்பூர் பிரதேசத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, பல குளங்கள் நீர் வற்றிய நிலையில் காணப்படுவதால் கால்நடைகள் நீருக்காகவும், தீவனத்திற்காகவும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன.
மூதூர் , தோப்பூர் பிரதேசத்திலுள்ள பம்மான்குளம், இத்திக்குளம், மறவட்டகுளம் உள்ளிட்ட பல குளங்கள் தற்போது நீரின்றி வறண்டு காணப்படுகின்றன.
அதேவேளை, மேய்ச்சல் நிலங்களும் காய்ந்து கருகியுள்ளதால், கால்நடைகள் உணவு மற்றும் நீருக்காக நீண்ட தூரம் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
என்றுமில்லாத வகையில் இம்முறை கடும் வறட்சி நிலவி வருவதால், கால்நடைகளின் உயிரிழப்பு மற்றும் கால்நடை வளர்ப்பின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்பட்டுள்ளதாக மூதூர் , தோப்பூர் பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கால்நடைகளுக்கான குடிநீர் மற்றும் அவசர தீவன வசதிகளை ஏற்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments