Column Left

Vettri

Breaking News

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் - வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்!!!




(பாறுக் ஷிஹான்) சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில் வயல் வெளிகளில் நடமாடும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்குக் கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இப்பகுதியில் அதிகரித்து வரும் யானைகளின் அச்சுறுத்தல் குறித்து அவதானம் செலுத்தும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டனர். காட்டு யானைகளின் ஊடுருவலைக் தடுக்கும் முதற்கட்ட நடவடிக்கையாக, பிரதேச சபையினால் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பெறப்பட்ட பாரிய போக்கஸ் விளக்குகள் (Focus Lights), யானைகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் ஆபத்தான இடங்களில் பொருத்தப்பட்டன. அத்துடன், காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் தொடர்ச்சியாகக் கண்காணித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அப்பகுதியில் விசேட வனஜீவிகள் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை விரைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இதனிடையே குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானையொன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் துரிதமாகச் செயற்பட்டு, எந்தவித பாதிப்புமுன்றிப் பாதுகாப்பாக மீண்டும் காட்டுப்பகுதிக்கு விரட்டியடித்துள்ளனர். மனித-யானை மோதலைத் தவிர்க்கும் வகையில் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட இத்துரித நடவடிக்கை, அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Subscribe Us