Column Left

Vettri

Breaking News

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: ஒக்டோபர் 7ஆம் திகதி மீண்டும் சமர்ப்பணங்கள்!!!




(நூருல் ஹுதா உமர்) கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மனுதாரரான த. கலையரசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு நீண்ட நேரம் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தது. குறிப்பாக, 1993ஆம் ஆண்டு கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு சட்டரீதியான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதேவேளை, இவ்வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக இணைந்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் பைஸர் முஸ்தபா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவின் சமர்ப்பணங்களும், கல்முனை உப பிரதேச செயலாளர் ஜே. அதிசயராஜ் சார்பிலான சமர்ப்பணங்களும் அடுத்த கட்டமாக இடம்பெறவுள்ளன. அதற்காக 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதியை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. மேலும், சமூக செயற்பாட்டாளர்களான முபாரிஸ் எம். ஹனீபா மற்றும் நஸீர் ஹாஜியார் உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள வழக்குகள் தொடர்பான சமர்ப்பணங்களும் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி மற்றும் நவம்பர் 2ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. கல்முனை உப பிரதேச செயலகத்தின் நிர்வாக மற்றும் தரமுயர்த்தல் விவகாரம் தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் சர்ச்சைக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

No comments

Subscribe Us