தொடர்ச்சியாக 05 மணிநேரம் பரத நாட்டியம் ஆடிய 09 வயது கிளிநொச்சி மாணவி றெஜிஸ்ரிகா சோழன் உலக சாதனை படைத்தார்!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் தீவிரப் பயிற்சியின் மூலம்
தொடர்ச்சியாக 5 மணிநேரம் பரத நாட்டியம் ஆடி, கிளிநொச்சியைச் சேர்ந்த 9 வயது மாணவி செல்வி றெஜிஸ்ரிகா சோழன் உலக சாதனையைப் படைத்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார்.
கிளிநொச்சியில் வசித்து வரும் மரியோ ப்ராங்ளின் ரெஜிஸ் மற்றும் உதயராணி தம்பதியரின் மகளான செல்வி றெஜிஸ்ரிகா, கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார். சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர், பிரஷாந்தினி நடனப் பள்ளியில் ஆர்வத்துடன் பரதநாட்டியம் பயின்று வருகிறார்.
மாணவி றெஜிஸ்ரிகாவின் நடனத் திறமையை அடையாளம் கண்ட அவரது பயிற்சி ஆசிரியர், அவரிடம் உலக சாதனை படைக்கும் அளவிற்கான திறமை இருப்பதை உணர்ந்து, அவரை தொடர்ந்து ஊக்கப்படுத்தி பயிற்சி அளித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க சோழன் உலக சாதனை நிகழ்வு கிளிநொச்சி நகரில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், 5 மணிநேரம் தொடர்ச்சியாக நடனமாட வேண்டும் என்ற நடுவர்களின் அறிவுறுத்தலை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்ட மாணவி றெஜிஸ்ரிகா, தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி தொடர்ந்து 5 மணிநேரம் பரதநாட்டியம் ஆடி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்றினார்.
தனது விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் நீண்டகால தீவிரப் பயிற்சியின் மூலம் 9 வயதிலேயே இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்
இந்தச் சாதனை நிகழ்வில் தலைமை விருந்தினராக யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக
கிளிநொச்சியின் கரைச்சி கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.சு. தர்மரத்தினம் , கிளிநொச்சியின் கரைச்சி தவிசாளர் திரு.அ. வேழமாலிகிதன், முல்லைத்தீவு சிலாவத்தை நாட்டிய வளர்மணி, நுண்கலைமாணி திருமதி கிறிஸ்ரினா சத்தியசீலன், ஈழத் தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் பணிப்பாளர் திருமதி சுதாகரன் வாசுகி, கிளிநொச்சி வட்டக்கச்சி வைத்திய கலாநிதி திரு வே. லதீஸ் மற்றும் தாயகம் கிரிவலம் அறக்கட்டளையின் பொருளாளர் திரு கே.ரீ.பாரதி ஆகியோர் பங்கு கொண்டு சாதனை மாணவியைப் பாராட்டிப் பரிசளித்தனர்.
சோழன் உலக சாதனை படைத்த மாணவி றெஜிஸ்ரிகாவுக்கு, சோழன் உலக சாதனை அமைப்பின் சார்பில் சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம் மற்றும் சாதனைப் பதிவுக் கோப்பு உள்ளிட்ட சிறப்பு அங்கீகாரங்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
No comments