Column Left

Vettri

Breaking News

புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களின் நலன் கருதி சாய்ந்தமருதில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை




(நூருல் ஹுதா உமர்) 2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பரீட்சை நிலையங்களில் விசேட டெங்கு ஒழிப்பு மற்றும் நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மற்றும் அல்- ஹிலால் வித்தியாலயம் ஆகிய பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, பாடசாலை வளாகங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு, நீர் தேங்கியுள்ள பகுதிகள் மற்றும் நுளம்பு பெருக்கத்திற்கான சாத்தியமான இடங்கள் அகற்றப்படுவதுடன், தேவையான சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், பரீட்சை நடைபெறும் பாடசாலை வளாகங்களில் நுளம்புகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட புகை விசிறல் (Fogging) நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலைகளின் நிர்வாகங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும், பாடசாலை வளாகங்களிலும் வீடுகளிலும் நீர் தேங்கக்கூடிய இடங்கள் காணப்படாத வகையில் சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் இவ்விசேட நடவடிக்கைகள், புலமைப்பரிசில் பரீட்சையை சுகாதாரமானதும் பாதுகாப்பானதுமான சூழலில் நடத்துவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Subscribe Us