இஸ்ரேல் ‘மொசாட்’ வலையில் டாக்டர் சுகுணன் விழுந்துவிட்டாரா? – சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் சந்தேகம்!
(பாறுக் ஷிஹான்)
video link-
https://fromsmash.com/V_u7EV2nJR-dt
இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்பு கிழக்கு மாகாணத்தில் பொத்துவிலிலும், நாட்டின் பல நகரங்களிலும் மீண்டும் கால் ஊன்றி வருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம். ஹரீஸ், டாக்டர் கு.சுகுணன் அதன் வலையில் விழுந்து செயல்படுகிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனையில் சனிக்கிழமை (15) இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையேயிருந்த பரஸ்பர நட்பையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைக்க ‘மொசாட்’ செய்த வேலையே காரைதீவு சந்தியில் இரு சமூகங்களையும் பிரித்தமையாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், அன்று ஆயுதமேந்திய சிலர் எடுத்த முடிவுகள் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கே பாரிய சவாலாக அமைந்ததை நினைவூட்டினார்.
தற்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் தமது மத மற்றும் கலாசார ஆடையுடன் கடமையைப் பொறுப்பேற்க அனுமதிக்கப்படாத விவகாரத்தில், டாக்டர் சுகுணன் அவ்வாறான ஒரு பின்னணியில் செயல்படுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
கல்முனைப் பிராந்தியத்தில் உருவெடுத்துள்ள இந்தச் சர்ச்சை தமிழ்–முஸ்லிம் ஐக்கியத்தை விரும்பும் அனைவருக்கும் பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்த ஹரீஸ், தமிழ் அரசியல் தலைமைகள் உடனடியாக இதில் தலையிட்டுச் சுமுகத் தீர்வைக் காண வேண்டும் என வலியுறுத்தினார்.
இது குறித்துத் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்பிக்களான மனோ கணேசன், இரா.சாணக்கியன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடி, சமூக நல்லிணக்கத்தைக் கருத்திற் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
கல்முனை மண்ணில் கடற்கரைப் பள்ளிவாசல் விழாக்கள் மற்றும் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய உற்சவங்களில் இரு சமூகத்தினரும் பரஸ்பரம் பங்கேற்கும் நீண்டகால நல்லிணக்க வரலாறு உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறி எந்தவொரு அரச நிறுவனமும் முடிவெடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
எனவே, சட்டநடவடிக்கைகளுக்குச் செல்ல முன்பாக அரசியல் மற்றும் நிர்வாக மட்டத்தில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
--
No comments