"அத்தம" தேசிய தூய்மை வேலைத்திட்டம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் விசேட கலந்துரையாடல்!!
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில், பொறுப்பதிகாரி சுனில் திஸாநாயக்க தலைமையில் சிவில் பாதுகாப்பு குழுக்களின் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று (07) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகம் மற்றும் "கிளீன் ஸ்ரீலங்கா" (Clean Sri Lanka) அமைப்பின் ஏற்பாட்டில் நாளை (08) சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ள "அத்தம" (ATHTHAMA) தேசிய தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள இந்நிகழ்வில் பொதுமக்களின் பங்களிப்புடன் சுற்றுச்சூழல் தூய்மை, பொது இடங்களை சுத்தப்படுத்துதல் மற்றும் டெங்கு போன்ற நோய்களைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், சிவில் பாதுகாப்பு அமைப்பின் கண்காணிப்பில் உள்ள 80 கிராம சேவையாளர் பிரிவுகளில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும், சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்துவதற்குமான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி சுனில் திஸாநாயக்க தெரிவித்தார். மேலும், குற்றச்செயல்களைத் தடுக்கும் பணியிலும், சமூக பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர்கள் பொலிஸாருடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர்.
No comments