மாரவில கடலில் மாயமான இளைஞர்!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
நண்பர்களுடன் விடுமுறையைக் கழிக்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட எதிர்பாராத சோகம் மாரவில, மூதுகட்டுவ கடற்கரைப் பகுதியில் கடலில் நீராடிக் கொண்டிருந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் பாரிய கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
வென்னப்புவ - நைனாமடம பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஐந்து பேர் கொண்ட இளைஞர்கள் குழுவினர், விடுமுறையைக் கொண்டாடுவதற்காக சனிக்கிழமை (22) மாலை மாரவில கடற்கரைக்கு வந்துள்ளனர். மாலை 6.00 மணியளவில் இவர்கள் கடலில் இறங்கி நீராடிக்கொண்டிருந்த போதே திடீரென வந்த இராட்சத அலை இரு இளைஞர்களை இழுத்துச் சென்றுள்ளது.
அலையில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞர்களைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கடலில் குதித்து ஒருவரை பத்திரமாக மீட்டுள்ளனர். எனினும், மற்றைய இளைஞர் கடல் அலைக்குள் இழுத்து செல்லப்பட்டு மாயமாகியுள்ளார்.
இவ்வாறு மாயமான இளைஞர் தொடாங்கொட -யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த எதிரிசூரிய கமகே பெதும் தெநெத் அசோக (வயது 18) என்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மாயமான 18 வயது இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக பிரதேச மீனவர்கள் உடனடியாக படகுகளில் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்த போதிலும், கடலின் கொந்தளிப்பான தன்மை மற்றும் பலத்த காற்று மீட்புப் பணிகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments