Column Left

Vettri

Breaking News

வரம் தரும் வரலட்சுமியை வழிபட்டால் 8 வகை செல்வங்கள் கிடைக்கும்!




நாளை(21) வெள்ளிக்கிழமை வரலெட்சுமி விரதம்! இந்த வருடம் இம்முறை நாளை 21.08.2026 வெள்ளிக்கிழமை - ஆவணி மாத வளர்பிறை வெள்ளி அன்று வரலட்சுமி விரதம் வருகிறது. இதை சுமங்கலி பெண்கள் தங்கள் கணவர், குழந்தைகள், குடும்பத்தின் நலனுக்காக அனுஷ்டிப்பார்கள். கதை: மகத நாட்டு ராணி சாருமதிக்கு லட்சுமி தேவி கனவில் தோன்றி "ஆவணி வெள்ளியில் என்னை பூஜித்தால் அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கும்" என்று சொன்னாள். அதன்படி பூஜித்து செல்வம் பெற்றாள். அன்றிலிருந்து இந்த விரதம் வந்தது. ஆடி மாதம் வரும் பௌர்ணமிக்கு முன்னதாகிய வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படும் முக்கியமான இந்து சமய விரதங்களில் ஒன்றே வரலெட்சுமி விரதமாகும். செல்வம், வளம், மங்களம், குடும்ப நலம் ஆகியவற்றை அருளும் மகாலெட்சுமியை வழிபடும் இந்த விரதம், குறிப்பாக சுமங்கலிப் பெண்களால் பக்தியுடன் அனுஷ்டிக்கப்படுகிறது. ‘வரம் தரும் லெட்சுமி’ என்ற பொருளில் வரலெட்சுமி என்ற பெயர் ஏற்பட்டதாகவும் சமய மரபில் விளக்கப்படுகிறது. விரதத்தின் ஆன்மீக மகத்துவம் வரலெட்சுமி விரதம் வெறும் செல்வத்தை வேண்டி மேற்கொள்ளப்படும் வழிபாடு மட்டுமல்ல. குடும்பத்தில் அமைதி, ஆரோக்கியம், நீண்ட ஆயுள், கணவன்–மனைவி ஒற்றுமை, பிள்ளைகளின் நலம், வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவற்றுக்காகவும் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. மகாலெட்சுமி எட்டு வடிவங்களில் அருள் புரிவதாகக் கருதப்படுகிறது. தனலெட்சுமி, தான்யலெட்சுமி, தைரியலெட்சுமி, விஜயலெட்சுமி, வீரலெட்சுமி, சந்தானலெட்சுமி, ஆதிலெட்சுமி, கஜலெட்சுமி ஆகிய அஷ்டலெட்சுமி வடிவங்களின் அருளும் இந்த வழிபாட்டின் மூலம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். விரதம் அனுஷ்டிக்கும் முறை விரத நாளன்று அதிகாலையில் எழுந்து வீட்டைச் சுத்தம் செய்து, வாசலில் கோலம் போட்டு, பூஜை அறையில் மகாலெட்சுமிக்கான பூஜை ஏற்பாடுகளைச் செய்வது வழக்கம். கலசத்தில் தண்ணீர் நிரப்பி, மஞ்சள், குங்குமம், அரிசி போன்றவற்றை வைத்து, அதன் மீது தேங்காய் மற்றும் மாவிலை வைத்து அலங்கரிக்கின்றனர். கலசத்திற்கு புடவை அல்லது வஸ்திரம் அணிவித்து, ஆபரணங்கள் மற்றும் மலர்களால் அலங்கரித்து வரலெட்சுமி தேவியாக பாவித்து வழிபடுகின்றனர். மகாலெட்சுமிக்கு மலர்கள், பழங்கள், இனிப்புகள், தேங்காய், வெற்றிலை–பாக்கு உள்ளிட்ட நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. பின்னர் லெட்சுமி அஷ்டோத்திரம், லெட்சுமி ஸ்தோத்திரம் மற்றும் வரலெட்சுமி விரதக் கதையைப் பாராயணம் செய்து தீபாராதனை செய்யப்படுகிறது. பெண்கள் மஞ்சள் சரடு அல்லது நோன்புக் கயிற்றை பூஜையில் வைத்து, பின்னர் கையில் கட்டிக் கொள்வதும் இவ்விரதத்தின் முக்கியமான மரபாகும். சுமங்கலிப் பெண்களின் சிறப்பு வழிபாடு வரலெட்சுமி விரதத்தில் சுமங்கலிப் பெண்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. திருமணமான பெண்கள் ஒருவருக்கொருவர் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் மற்றும் சிறு பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்திக் கொள்வது வழக்கம். இது பெண்களின் மங்கள வாழ்வையும், குடும்ப ஒற்றுமையையும், தலைமுறை நலனையும் பேணும் ஒரு பாரம்பரியச் சடங்காகக் கருதப்படுகிறது. விரதத்தின் அடிப்படைச் செய்தி வரலெட்சுமி விரதம் மனித வாழ்க்கையில் செல்வம் மட்டுமல்ல; மனநிறைவு, குடும்ப ஒற்றுமை, அன்பு, நம்பிக்கை, நற்குணம் ஆகியவையும் உண்மையான வளம் என்பதை உணர்த்துகிறது. மகாலெட்சுமியை மனமுருகி வழிபட்டு, பிறருக்கு உதவி செய்து, தான தர்மங்களில் ஈடுபட்டு, நல்ல எண்ணங்களுடன் வாழ்வதே இந்த விரதத்தின் உயர்ந்த ஆன்மீக நோக்கமாகக் கருதப்படுகிறது. “வரலெட்சுமி அம்மனை மனமார வழிபட்டால் வாழ்வில் வளம், நலம், வெற்றி, மங்களம் பெருகும்” என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். "வரம் தரும் வரலட்சுமி, வாழ்வில் வளம் தருவாள்" -வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா

No comments

Subscribe Us