Column Left

Vettri

Breaking News

மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு 1988 ஆம் ஆண்டு ஆசிரியர் அணியினர் 883 பேரும் பாரிய பங்களிப்புச் செய்தனர்! 8 மணிநேரம் நடைபெற்ற ஒன்றுகூடலில் அணிச் செயலாளர் ரவீந்திரன் பெருமிதம் !!




(வி.ரி.சகாதேவராஜா) மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு 1988 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற ஆசிரியர் அணியினர் 883 பேரும் பாரிய பங்களிப்புச் செய்துள்ளனர். இந்த அணி மலையக கல்விக்கு மிகப்பெரும் சாதனைகளை படைத்துள்ளது என்பதும் இது வரலாற்றில் குறிப்பிட வேண்டிய ஒரு விடயமாகும். இவ்வாறு 1988 அணியின் செயலாளரும் பூண்டுலோயா விவேகானந்த மகா வித்தியாலய அதிபருமான ஆறுமுகம் ரவீந்திரன் பெருமிதம் தெரிவித்தார். 1988 இல் நியமனம் பெற்ற மலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான ஆசிரியர்களின் இறுதி ஒன்றுகூடல் ஒன்று ஹட்டன் சீடா வள நிலையத்தில் தலைவர் எஸ்.பரமஜோதி தலைமையில் நேற்று நடைபெற்றது. அங்கு செயலாளர் ரவீந்திரன் மேலும் உரையாற்றுகையில்.. 1988.08.06 தேதி மலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான முதல் நியமனம் எமக்கு கிடைக்கப்பெற்றது. ஒட்டுமொத்த மலையகத்தில் பதுளை,நுவரெலியா மற்றும் இரத்னபுரி மாவட்டத்தில் 883 பேருக்குரிய நியமனங்கள் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த மலையகத்திலும் இன்று 2026 ஆம் ஆண்டு 38 வருட சேவையை நாங்கள் நிறைவு செய்திருக்கின்றோம். இதில் மிக முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால் இதிலே நூற்றுக்கு 92 வீதமானவர்கள் ஓய்வு பெற்று விட்டார்கள். எஞ்சி இருக்கும் 80 பேர் நாங்கள் 2027 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெறவுள்ளோம். ஆகவே இங்கு ஒன்றுகூடியுள்ளோம்என்றார். காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு மாலை 5 மணி வரை எட்டு மணி நேரம் நடைபெற்றது. நுவரெலியா கல்வி வலயத்தினுடைய கோட்ட கல்வி பணிப்பாளர் எஸ். கணேசமூர்த்தி ஹட்டன் கல்வி வலயத்தினுடைய உதவி கல்விப் பணிப்பாளர் பி. நாகராஜ் நுவரேலியா கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் கே. நிக்கலஸ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இவர்களும் 1988 ஆம் ஆண்டு இதே அணியில் நியமனம் பெற்றவர்களாவர்.

No comments