கதிர்காம ஆடி வேல் விழா- உகந்தை காட்டுப்பாதை சற்றுமுன் உத்தியோகபூர்வமாக திறப்பு- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காடுகளுக்குள் பிரவேசம்!!
பாறுக் ஷிஹான்
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் ஆடிப் பேரணி விசேட பாதயாத்திரைக்காக, உகந்தை வழியூடான காட்டுப்பாதை இன்று (10) அதிகாலை 06:00 மணியளவில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "அரோகரா" கோஷங்களுடன் யால வனப்பகுதிக்குள் பிரவேசித்து வருகின்றனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை இன்று 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 5.30 அளவில், உகந்தமலை முருகனாலயத்தின் அதிகாலை விசேட பூஜையின் பின்னர் திறந்துவைக்கப்பட்டது.
அம்பாறை,மொனராகலை அரசாங்க அதிபர்களின் வழிகாட்டலில் லகுகலை பிரதேச செயலாளர் என். நவநீதராஜா ஒழுங்கமைப்பில், அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் காட்டுப்பாதை திறந்து வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி தலைமையிலான குழுவினர் நேற்றிரவுக்குள் அனைத்து முன் ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்திருந்த நிலையில், இன்று அதிகாலை முதல் திட்டமிட்டபடி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பாதை திறக்கப்பட்ட இன்றைய முதல் நாளில் மட்டும் சுமார் 8,000 பக்தர்கள் வனப்பகுதிக்குள் பயணிப்பார்கள் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இப்பாதை வரும் ஜூலை 24 ஆம் திகதி வரை திறந்திருக்கும்.கடந்த கால கசப்பான அனுபவங்களை கருத்திற் கொண்டு, இம்முறை வனப்பகுதிக்குள் நுழையும் பக்தர்களுக்கு இறுக்கமான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
காட்டுப்பாதையில் பயணிக்கும் பக்தர்களுக்கு பிளாஸ்டிக் தண்ணீர்ப் போத்தல்களையோ அல்லது பொலித்தீன் உணவுப் பார்சல்களையோ வழங்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளால் காட்டு விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தடுக்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் குமுக்கன் மற்றும் யால வனப்பகுதி எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments