ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும் – அமீர் அப்னான்!!
( ஜீ + மின்மினி மின்ஹா)
சம்மாந்துறை பிரதேச சபையின் 5வது கூட்டத்தொடரின் 13வது அமர்வு நேற்று (07) தவிசாளர் கௌரவ. ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் நடைபெற்றபோது, கல்வி மற்றும் பிரதேச அபிவிருத்தி தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) உறுப்பினர் ஏ.எம்.எம். அப்னான், ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக திட்டமிட்ட நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.
தற்போதைய சூழலில் கல்வி வணிகமயமாகி வருவதால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை கல்வியாளர்களாக உருவாக்குவது பெரும் சவாலாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஏழை மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கடந்த காலங்களில் கல்விச் சமூகமொன்றை உருவாக்கி, ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் வகுப்புகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், செந்நெல் மறுமலர்ச்சி' அமைப்பின் ஊடாக கடந்த மூன்று ஆண்டுகளாக அல- அர்சத் ம.வி , செந்நெல் ஸாஹிரா ம. வித். பாடசாலையை மையமாகக் கொண்டு இலவச கல்விக் கருத்தரங்குகள் மற்றும் செமினார்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கு தொடர்ச்சியாக கல்விச் சேவை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, சம்மாந்துறையில் பொதுத் தேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த சில காணிகள் திட்டமிட்ட வகையில் அபகரிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அவற்றை சட்டத்திற்கமைவாக பாதுகாத்து உரிய உரிமையாளர்களுக்கோ அல்லது பொதுத் தேவைகளுக்கோ முறையாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் கல்வி, சமூக மேம்பாடு மற்றும் பிரதேச அபிவிருத்தியை ஒருங்கிணைத்து புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சம்மாந்துறையை வளமான பிரதேசமாக மாற்ற அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என உறுப்பினர் ஏ.எம்.எம். அப்னான் (ACMC) சபையில் வலியுறுத்தினார்.
No comments