Column Left

Vettri

Breaking News

நீதிபதிகளின் பதவிக் கால நீட்டிப்புக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் - சாகர காரியவசம்!!




நீதித்துறையின் சுயாதீனத்தை பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும். ராஜபக்ஷர்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வருவது முற்றிலும் தவறானதொரு எடுத்துக்காட்டு என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி காரியாலயத்தின் தீர்மானத்தை அமைச்சரவையின் தீர்மானம் என்று குறிப்பிட முடியாது. அமைச்சரவையின் தலைவராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெயரளவில் செயற்படுகிறார். மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தான் சகல தீர்மானங்களையும் எடுக்கிறார். வெளிப்பாடையான பேச்சுவார்த்தைகள் ஏதும் இல்லாமல் நீதிபதிகளின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த செயற்பாட்டுக்கு எதிராக ஒட்டுமொத்த சட்டத்தரணிகளும் இன்று ஒன்றிணைந்துள்ளார்கள். அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான இந்த செயற்பாட்டுக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும். நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் தீர்மானத்துக்கு அரசாங்கம் முன்வைக்கும் காரணிகள் அடிப்படையற்றவை. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்காகவே நீதிபதிகளுக்கு மேலதிகமாக 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. உண்மையான நோக்கம் ஜனாதிபதியிடம் காணப்படுமாயின் உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் காணப்படும் 08 வெற்றிடங்களை நிரப்புவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. ராஜபக்ஷர்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வருவது முற்றிலும் தவறானதொரு எடுத்துக்காட்டு. நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கம் அரசியல் பழிவாங்கலாக அமையக் கூடாது என்றார்.

No comments