Column Left

Vettri

Breaking News

அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் சிறை செல்ல வேண்டும் – உதய கம்மன்பில!!




நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் சட்டவரைவு தயாரிக்கப்படாத நிலையில் உயர்நீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் வகையிலான தீர்மானத்தை அறிவிக்காது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ எவ்வாறு உறுதியாக குறிப்பிட முடியும். இது நீதிமன்றத்துக்கு மறைமுகமாக விடுக்கும் அச்சுறுத்தலாம். அமைச்சரவை பேச்சாளர் ஒன்று நீதிமன்றில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் அல்லது சிறைச் செல்ல வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாராளுமன்றத்தில் மூன்று இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளதால் ஜனாதிபதி தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்.மக்களின் கருத்துக்கும், எதிர்;க்கட்சியின் உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பதில்லை. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின் ஆலோசனைகள் மற்றும் கட்டளைகளுக்கு அமைவாகவே ஜனாதிபதி செயற்படுகிறார்.நாட்டு மக்கள் ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்கவை தெரிவு செய்துள்ளார்களே தவிர ரில்வின் சில்வாவை அல்ல என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். நீதிபதிகளின் பதவி காலம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராக ஒட்டுமொத்த சட்டத்தரணிகள் சமூகமும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள பின்னணியில் அவற்றை பொருட்படுத்தாமல் தனது தீர்மானத்தில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அப்பாற்பட்டு பெரும்பான்மை ஆதரவுடன் பதவியில் இருந்தார்.இறுதியில் வீதியில் இறங்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தது.இறுதியில் அறிவிக்காமலே நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த சகல அரசாங்கங்களும் நெருக்கடிக்குள்ளாகின. ஆகவே கடந்த கால சம்பவங்களை ஜனாதிபதி நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் வகையிலான அரசியலமைப்புத் திருத்தம் இன்னும் இரண்டு மாத காலத்துக்குள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரான நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டவரைவு இதுவரையில் தயாரிக்கப்படவில்லை. சட்ட வரைஞர் குறித்த சட்டவரைவை தயாரித்தப் பின்னர் அது சட்டமூலமாக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும். அதன் பின்னர் நாட்டு மக்கள் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த 14 நாட்கள் காலவகாசம் வழங்கப்பட வேண்டும்.இந்த நடவடிக்கைகளுக்கு குறைந்தது இரண்டரை மாதங்களேனும் செல்லும். சட்டமூலத்தை நிறைவேற்றுவதாயின் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஜனாதிபதி ஒருமாத காலவகாசத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும். சட்டவரைவு தயாரிக்கப்படாத நிலையில் உயர்நீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் வகையிலான தீர்மானத்தை அறிவிக்காது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அமைச்சரவை பேச்சாளர் எவ்வாறு உறுதியாக குறிப்பிட முடியும். இது நீதிமன்றத்துக்கு மறைமுகமாக விடுக்கும் பாரிய அச்சுறுத்தலாம். அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஒன்று நீதிமன்றில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் அல்லது சிறைச் செல்ல வேண்டும். உயர்நீதிமன்றம் இதனை தீர்மானிக்க வேண்டும் என்றார்.

No comments