Column Left

Vettri

Breaking News

முஸ்லிம் கலை, பண்பாட்டு மரபுகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் – எம்.ஏ.சி.எம். ஜுஹைஸ்!!




(மின்மினி மின்ஹா + தாரிக்) இலங்கை முஸ்லிம்களின் கலை, கலாசாரம் மற்றும் பண்பாட்டு மரபுகள் பாதுகாக்கப்பட்டு, அவற்றை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.சி.எம். ஜுஹைஸ் வலியுறுத்தினார். அக்கரைப்பற்றில் ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் தேசகீர்த்தி ஏ.எல். தௌஃபீக் (JP) அவர்களைக் கௌரவிக்கும் விழாவும் கலை நிகழ்வும் (17) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை உரை மற்றும் வரவேற்புரையை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், இலங்கை முஸ்லிம்களின் கலை, இலக்கியம், இசை மற்றும் கட்டிடக்கலை மரபுகள் தனித்துவமான வரலாற்றுச் சிறப்பைக் கொண்டுள்ளன என்றார். சூஃபியிசத்தின் தாக்கம், கிழக்கு ஆபிரிக்க கலாசாரத்தின் செல்வாக்கு, சீனடி, சிலம்படி போன்ற பாரம்பரிய கலை வடிவங்கள், மௌலானா ஜலாலுத்தீன் ரூமி மற்றும் ஷம்ஸ் தப்ரீஸ் போன்றோரின் ஆன்மிகப் பங்களிப்புகள் முஸ்லிம் கலாசாரத்தை வளப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன், அக்கரைப்பற்று மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தரிக்கா மரபுகள், நக்ஷபந்தியா தரிக்காவின் பணிகள் மற்றும் அப்துல் மஜீத் மக்கத்தார் வாப்பா போன்ற கலைஞர்களின் பங்களிப்புகள் இன்றளவும் இந்த பாரம்பரியத்தை உயிர்ப்புடன் பேணிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த அரிய கலாசார மரபுகளை ஆவணப்படுத்தி, கல்வி மற்றும் கலை நிகழ்வுகள் ஊடாக இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது காலத்தின் தேவையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றத்தின் போசகர் முக்கலாம் அப்துல் ஸமத் ஆலிம் அப்துல் மஜீத் (மக்கத்தார் ரஹ்) மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர். மேலும், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் வை. றாஷித், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மொழித்துறை விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக் உள்ளிட்ட பலர் கௌரவ அதிதிகளாகப் பங்கேற்று நிகழ்வைச் சிறப்பித்தனர். நிகழ்வின் இறுதியில் தேசகீர்த்தி ஏ.எல். தௌஃபீக் (JP) அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி, சகல பிரதேசங்கள் சார்பிலும் பொன்னாடைகள் போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், கிழக்கு மாகாண கலாசார திணைக்கள பணிப்பாளர் மேனகா புவிக்குமார் அவர்களுக்கு பாராட்டுப் பத்திரம், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

No comments

Subscribe Us