Column Left

Vettri

Breaking News

பாடசாலை மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சி முகாம்!!




நூருல் ஹுதா உமர் அவசரகால சூழ்நிலைகளில் சரியான முதலுதவியை வழங்கும் அறிவு மற்றும் திறன்களை பாடசாலை மாணவர்களிடையே மேம்படுத்தும் நோக்கில், இறக்காமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட முதலுதவி பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை (07) வரிப்பத்தான்சேனை அல்-அமீன் மகா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்-ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா தலைமையில் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. தலைமை உரையாற்றிய உதவிப் பிரதேச செயலாளர், ஒவ்வொருவரும் முதலுதவி தொடர்பான அடிப்படை அறிவைப் பெற்றிருப்பது அவசரநிலைகளில் உயிர்களைக் காப்பாற்ற உதவும் முக்கியமான சமூகத் திறனாகும் எனக் குறிப்பிட்டதுடன், மாணவர்கள் இவ்வாறான பயிற்சிகளைப் பெற்று சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார். பயிற்சியின் வளவாளராக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம். பௌஷாட் கலந்து கொண்டு, விபத்துகள் மற்றும் திடீர் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார். இதன்போது காயங்களுக்குக் கட்டுப் போடுதல், இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துதல், தீக்காயங்களுக்கு சிகிச்சையளித்தல், எலும்பு முறிவுகள், மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற அவசரநிலைகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் இருதய-நுரையீரல் உயிர்ப்பித்தல் (CPR) தொடர்பான செயன்முறைப் பயிற்சிகளும் நடத்தப்பட்டன. பங்கேற்ற மாணவர்கள் செயன்முறைப் பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு, பல்வேறு கேள்விகளை எழுப்பி தெளிவுகளைப் பெற்றதுடன், அவசரநிலைகளை எதிர்கொள்ளும் நடைமுறைத் திறன்களையும் கற்றுக்கொண்டனர். மாணவர்களிடையே பொறுப்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் சமூக சேவை மனப்பான்மையை வளர்க்கும் வகையில் இத்தகைய பயிற்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டியதன் அவசியமும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது. இப்பயிற்சி முகாமில் இறக்காமம் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட வரிப்பத்தான்சேனை அல்-அமீன் மகா வித்தியாலயம், அல்-மதீனா வித்தியாலயம் மற்றும் அஸ்-ஸபா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிதிப் பங்களிப்புடன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் பி. யசோதா அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், அல்-அமீன் மகா வித்தியாலய அதிபர் எஸ்.எல். கலந்தர் லெப்பை, உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.கே. சாஜிதா, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.ஐ. பஸீனா உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.

No comments

Subscribe Us