Column Left

Vettri

Breaking News

சித்தர்களின் கதிர்காம ஆயிரம் வேல்யாத்திரை நாளை ஆரம்பம்! சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ விபரிப்பு !




( வி.ரி. சகாதேவராஜா) சித்தர்களின் குரல் கதிர்காம கானக ஆயிரம் வேல் யாத்திரை நாளை 10ம் திகதி வெள்ளிக்கிழமை உகந்தை மலையில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகும் என சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகதலைவர் சிவசங்கர் ஜீ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், இக் கதிர்காமத்திற்கான கானக வேல் யாத்திரை ஜூலை 15ம் திகதி புதன்கிழமை கதிர்காமத்தை சென்றடையும் என்பதையும் அதிகார பூர்வமாக அறிவித்தார். அதற்கு முன்னதாக, பாரம்பரிய முறைப்படி குறித்த வேல் யாத்திரை வேலோடுமலையில் இருந்து கடந்த ஜுலை 02 ஆம் திகதி வேலோடுமலை முருகன் கோவில் ஆதீனகர்த்தா முருக பக்தர் தியாகராஜ சுவாமிகள் தலைமையில் சில பக்தர்களுடன் ஆரம்பமாகி நேற்று உகந்தமலை முருகன் ஆலயத்தை சென்றடைந்தது. எனினும் , அனைத்து அடியார்களும் கலந்து கொள்ளும் கானக வேல் யாத்திரை நாளை 10 ஆம் திகதி உகந்தமலை முருகன் கோவிலில் இருந்து ஸ்தாபகதலைவர் சிவசங்கர் ஜீ வழிகாட்டலில், தலைவர் ஆதித்தன் தலைமையில் ஆரம்பமாகும். ஸ்தாபகதலைவர் சிவசங்கர் ஜீயின் தாயார் திருமதி ரகுபதி தனலெட்சுமி ( ஓய்வுபெற்ற கணித ஆசிரியை) நேற்று புதன்கிழமை சிவபதமடைந்தார். அவரது நல்லடக்கம் நாளை வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. ஆதலால் சங்கர் ஜீ இம்முறை பாதயாத்திரையில் கலந்து கொள்ளமாட்டார். மகிமைகள் பொருந்திய இவ்வருட 2026 கதிர்காம ஆடி வேல் விழா உற்சவம் ஜூலை 15ம் திகதி புதன்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பிக்கப்பட்டு 30 ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது. இது தொடர்பாக சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகதலைவர் சிவசங்கர் ஜீ மேலும் கூறுகையில்.. இலங்கை ஒரு பொக்கிஷ புண்ணிய பூமி. போகர் தொடங்கி இமயமலை கிரியா பாபாஜி வரை எத்தனையோ பல்லாயிரம் சித்த ரிஷிகள், யோகிகள், ஞானிகள் அவர்கள் கால் தேயத் தேய முருகனை தரிசிக்க நடந்த பாதை கதிர்காம பாத யாத்திரை. குறித்த காட்டுப்பாதை. ஒவ்வொரு வருடமும் கதிர்காம திருவிழா காலங்களில் 15 நாட்கள் மட்டும் திறக்கப்படும். ஆதியில் நடந்த சித்த பெரு மக்கள் இங்கே ஆறு இடங்களில் தங்கி ஆறு வகையான சக்திகளை வனத்தில் விட்டு சென்றுள்ளார்கள் என வரலாறுகள், நம் முன்னோர்கள் சொல்கிறார்கள். முதல் நாள் தங்கும் "வண்ணாத்தி வெட்டை" என்ற கிணத்தடியில் "கருப்பண்ண சாமி" என்ற பாலாவடி கறுப்பையும், இரண்டாவது நாள் தங்கும் "குமுக்கன் ஆற்றங்கரையில்" வன தேவதைகளான "காளி" சக்திகளையும், மூன்றாவது நாள் தங்கும் அமானுஷ்ய பூமியான "நாவலடி" வனத்தில் பாதாள "பைரவ" சக்திகளையும், நான்காவது நாள் தங்கும் "யாள" ஆற்றங்கரையில் "நாக" சக்திகளையும்," ஐந்தாவது நாள் தங்கும் "வள்ளியாற்று" பாலத்தில் "ஜல தேவதையின்" சக்திகளையும் கடந்து, ஆறாவது நாள் கதிர்காம மண்ணை அடைய நமக்குள் உள்ள "ஆறு ஆதார சக்கரங்களும் உயிர் பெற்று" மிக பெரிய யோகியாக உங்கள் உடல் மனம் உருவாகும். இதுதான் இந்த பாத யாத்திரையின் மூல ரகசியம்.ஒவ்வொரு காடுகளையும் கடக்கும் போதும், ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு இடத்திலும் தங்கும் போதும், அங்குள்ள பிரபஞ்ச சக்தி, தேவதா சக்தி நம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும். முறையாக இந்த ரகசியங்களை எல்லாம் உணர்ந்து பயணியுங்கள். இது சுற்றுலா பாதை அல்ல.. நம்மை முழுமைப்படுத்தும் ஒரு பூரண யாத்திரை. அனைத்து ஏற்பாடுகளும் சித்தர்களின் குரல் அமைப்பின் அன்பர்களினால் முன்னெடுக்க படுகிறது.... ஆயிரம் பேருடன், ஆயிரம் வேல்களுடன், வேல் யாத்திரையாக..... அனைத்து நாட்களும் எங்கள் சித்தர்களின் குரல் சமஸ்தான நளபாக சக்கரவத்திகளினால் மூன்று வேளையும் சாத்வீக உணவும், இரண்டு வேளையும் வழங்கப்பட இருக்கிறது. தினமும் ஒவ்வொரு இடங்களிலும், சக்தி வாய்ந்த வேல் பூஜை,அபூர்வ வன மூலிகைகளினால் சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் வேள்வி, வன பூஜை, வன போஜனம்,மூலிகை குளியல்,ஒரு கோடி சண்முக பஞ்சாட்சர ஜெபம், கூட்டு வழிபாடுகள், நமது கர்ம வினைகளை கரைக்கும் அற்புதமான தியானங்கள், திருப்புகழ் பாராயணங்கள் என தொடரும். எங்களுடன் பயணிப்பவர்கள் ஜூலை 10ம் திகதி காலைக்குள் உகந்தைக்கு வரவும். இது சுற்றுலா பாதை அல்ல.. இறைவனே இயற்கையை நோக்கி நம்மை அழைத்து செல்லும் ஒரு புதுமையான ஆன்மீக யாத்திரை, பக்தி கலாச்சார நெறிகளை கடைப்பிடிக்கவும்.அனைவரும் கட்டாயம் ஆறு நாட்களும் காவி உடையிலேயே வர வேண்டும்.பயணத்தின் வரும் அனைவர்க்கும் இரண்டு வேளை தேநீர், மூன்று வேளையும் அற்புதமான உணவு வழங்கப்படும்.

No comments

Subscribe Us