Column Left

Vettri

Breaking News

ஹமீதியன்ஸ் கிரிக்கெட் திருவிழா – சீசன் 7 ஜெர்சி வெளியீடு மற்றும் ஊடக சந்திப்பு!!




கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி முன்னாள் மாணவர் தலைவர்கள் சங்கம் (Former Prefects' Guild) ஏற்பாடு செய்த "ஹமீதியன்ஸ் கிரிக்கெட் திருவிழா – சீசன் 7" தொடரின் ஜெர்சி வெளியீட்டு விழாவும் ஊடக சந்திப்பும் இன்று கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ட்றுரூட் (TruRout) நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான முகமது முனாசர் முனாஸ் கலந்து கொண்டு, போட்டித் தொடருக்கான உத்தியோகபூர்வ ஜெர்சியை வெளியிட்டு வைத்தார். கௌரவ அதிதிகளாக ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் முதல்வர் என். ஷானியா டைன், சட்டத்தரணி எஸ்.ஏ.சி. ஆதில் அகமது ஆகியோருடன் விசேட அதிதிகளாக கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் தொழிலதிபருமான இம்தியாஸ் இல்லியாஸ், கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளரும் கல்விக் குழுத் தலைவருமான அஸ்ரின் ஸாஹீர், கல்லூரியின் முன்னாள் மாணவர் தலைவர்கள் சங்க தலைவர் எச்.ஏ.எம். அஹ்லான், முன்னாள் மாணவர் தலைவர்கள், பழைய மாணவர்கள், அழைப்பாளர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். நிகழ்வில் உரையாற்றிய கல்லூரி முதல்வர் என். ஷானியா டைன், ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் வளர்ச்சிப் பயணத்தில் பழைய மாணவர்களின் பங்களிப்பு அளப்பரியது எனக் குறிப்பிட்டார். கல்வி, விளையாட்டு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்களின் ஆளுமை மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களில் பழைய மாணவர்கள் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்பு கல்லூரியின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். எதிர்காலத்திலும் பழைய மாணவர்கள் தங்களது தாய்க் கல்வி நிலையத்துடன் நெருங்கிய உறவைப் பேணியும், புதிய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். இதன்போது, "ஹமீதியன்ஸ் கிரிக்கெட் திருவிழா – சீசன் 7" போட்டித் தொடரின் இலக்குகள், போட்டி ஏற்பாடுகள், அணிகளின் பங்கேற்பு மற்றும் எதிர்வரும் போட்டிகள் தொடர்பான விபரங்கள் ஊடகங்களுக்கு விளக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டன. முன்னாள் மாணவர்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் விளையாட்டு உணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த கிரிக்கெட் திருவிழாவின் ஏழாவது பருவத்திற்கான ஆரம்ப நிகழ்வாக அமைந்த இவ்விழா சிறப்பாக நிறைவுற்றது.

No comments

Subscribe Us