Column Left

Vettri

Breaking News

முத்தமிழுக்கும் சைவத்திற்கும் அருந்தொண்டாற்றிய சுவாமி விபுலானந்தரின் 79வது சிரார்த்த தினம் இன்று!!




Sunday article: 19.07.2026 ஞாயிறு. முத்தமிழ் வளர்ச்சிக்கும், சைவ சமயப் பரப்பலுக்கும், கல்வி மற்றும் தமிழிசை ஆய்வுக்கும் அரும்பணியாற்றிய தமிழறிஞரும் இராமகிருஷ்ண மிஷன் துறவியுமான சுவாமி விபுலானந்தரின் 79வது சிரார்த்த தினம் இன்று (ஜூலை 19) ஞாயிற்றுக்கிழமை ஆகும். 1892 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் நாள் மட்டக்களப்பு மாவட்டத்தின்( அன்று) காரைதீவில் பிறந்த அவர், இயற்பெயர் மயில்வாகனன். சிறுவயதிலிருந்தே கல்வி, அறிவியல், தமிழ், ஆன்மிகம் ஆகிய துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த அவர், பின்னர் இராமகிருஷ்ண மிஷனில் இணைந்து பிரபோதசைதன்யர் என்ற நாமத்துடன் துறவறம் பூண்டு "சுவாமி விபுலானந்தர்" என்ற பெயரால் உலகப் புகழ் பெற்றார். தமிழ் மொழி, இலக்கியம், சைவ சித்தாந்தம், இசை, நாடகம் உள்ளிட்ட முத்தமிழின் அனைத்து பரிமாணங்களிலும் அவர் ஆற்றிய பங்களிப்பு தனித்துவமானதாகும். குறிப்பாக, சங்ககால இசைக்கருவியான யாழ் தொடர்பாக ஆழமான ஆய்வை மேற்கொண்டு எழுதிய "யாழ்நூல்" தமிழிசை ஆய்வின் உன்னத படைப்பாகக் கருதப்படுகிறது. இந்நூல் தமிழரின் தொன்மையான இசை மரபை உலகறியச் செய்த முக்கிய ஆய்வு நூலாக இன்றளவும் மதிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் இந்தியாவில் பல உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியராகவும் விரிவுரையாளராகவும் பணியாற்றிய சுவாமி விபுலானந்தர், கல்வி என்பது மனித முன்னேற்றத்தின் அடித்தளம் என்ற உயரிய கொள்கையுடன் எண்ணற்ற மாணவர்களை உருவாக்கினார். அதேவேளை, சைவ சமயத்தின் உயரிய நெறிகளையும் மனிதநேயச் சிந்தனைகளையும் மக்களிடையே பரப்புவதிலும் பெரும் பங்காற்றினார். 1947 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் நாள் மகாசமாதி அடைந்த சுவாமி விபுலானந்தரின் அறிவுப் பாரம்பரியம், கல்வித் தொண்டு, தமிழ்ப்பற்று மற்றும் சைவப் பணி இன்று வரை அழியாத ஒளியாகத் திகழ்கின்றன. அவரது 79வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு காரைதீவு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள், சமய வழிபாடுகள், மலரஞ்சலி நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. தமிழ் மொழி, தமிழிசை, சைவம் மற்றும் கல்விக்காக தம் வாழ்நாளையே அர்ப்பணித்த சுவாமி விபுலானந்தரின் சேவைகளை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதும், அவர் காட்டிய அறிவு, ஒழுக்கம், ஆன்மிகம் மற்றும் மனிதநேயப் பாதையில் பயணிப்பதும் அவருக்கு செலுத்தும் உயரிய மரியாதையாகும். இவரது சமாதி கல்லடி சிவானந்தா வளாகத்தில் அமைந்துள்ளது. இவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும் ஈழத்தில் பிறந்து ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கு இவர் ஆற்றிய பணிகள் அளப்பெரியன என்றால் மிகையல்ல. வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா ஆலோசகர் & முன்னாள் தலைவர், சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணி மன்றம் காரைதீவு

No comments

Subscribe Us