Column Left

Vettri

Breaking News

இருநாள் மாணவர் தலைமைத்துவ வதிவிட முகாம் : சட்டம், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு குறித்து சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி வலியுறுத்தல்!!




நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் மாணவர்களின் தலைமைத்துவ ஆளுமைகளை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட "மாணவர் தலைமைத்துவ வதிவிட முகாம் – 2026" (Prefect Leadership Residential Camp – 2026) கடந்த (26) ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு பாடசாலை வளாகத்தில் ஆரம்பமானது. பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியர் மேஜர் எம்.எஸ்.எஸ். ஷிப்லியின் ஒருங்கிணைப்பில், பாடசாலை அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.சி. இந்திக கலந்து கொண்டு இருநாள் வதிவிட முகாமை ஆரம்பித்து வைத்தார். பாடசாலையின் ஒழுக்காற்றுச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்முகாமில் சுமார் 100 மாணவர் தலைவர்கள் பங்கேற்றுள்ளதுடன், தலைமைத்துவம், ஒழுக்கம், குழு ஒருங்கிணைப்பு, பொறுப்புணர்வு, சமூகப் பண்புகள், முடிவெடுக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. முகாமில் தேசிய மாணவர் படையணியின் 38ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் கே.எம். தமீம், சாய்ந்தமருது பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீ. குகராஜ், முதலுதவி பயிற்றுவிப்பாளர் எம்.எஸ்.எப். நிஹாரா, உளவளத்துணை ஆலோசகர் மனுஷ் அபூபக்கர் மற்றும் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் வளவாளர்களாக கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர். இந்நிகழ்வில் உரையாற்றிய சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.சி. இந்திக, பெற்றோர்களும் மாணவர்களும் சட்டத்தையும் ஒழுக்கத்தையும் மதித்து நடப்பது காலத்தின் தேவையாகும் என வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு நாட்டின் சட்டத்திற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். குறிப்பாக மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிவது உயிர் பாதுகாப்பிற்கும் சட்டத்தை மதிப்பதற்கும் அவசியமானது. அனைத்து மதங்களும் மனித உயிரைப் பாதுகாக்கும் உயரிய பண்புகளையே போதிக்கின்றன என்றார். மாணவர் தலைவர்களை நோக்கி உரையாற்றிய அவர், ஒரு மாணவரின் தவறான செயல் முழுப் பாடசாலையின் நற்பெயரையே பாதிக்கக்கூடும். எனவே ஒவ்வொரு மாணவரும் பொறுப்புணர்வுடனும் ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், அளவுக்கு மீறிய கைப்பேசி பயன்பாடு மற்றும் போதைப்பொருள் பழக்கம் ஆகிய இரண்டிலிருந்தும் மாணவர்கள் முற்றிலும் விலகி இருக்க வேண்டும். உண்மையான தலைமைத்துவம் என்பது தனித்து முன்னேறுவது அல்ல; தன்னுடன் இருப்பவர்களையும் முன்னேற்றப் பாதைக்கு வழிநடத்துவதே சிறந்த தலைமைத்துவம் என்றும் அவர் குறிப்பிட்டார். பெற்றோர்களை நோக்கி உரையாற்றிய அவர், ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளும் ஒழுக்க நடவடிக்கைகளை புரிந்துணர்வுடன் அணுகுமாறும், ஒவ்வொரு சிறிய ஒழுக்க நடவடிக்கையையும் பொலிஸ் முறைப்பாடாக மாற்றாமல் ஆசிரியர்களுடன் இணைந்து பிள்ளைகளை நல்வழிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். "ஒரு தவறைச் செய்ய முன்பாக மாணவர்கள் தங்கள் பெற்றோரையும் குடும்பத்தின் கௌரவத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒழுக்கமே வாழ்க்கையின் மிகப் பெரிய செல்வம்; அதனைப் பேணுபவர்களே சிறந்த தலைவர்களாக உருவாக முடியும்" எனவும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்களான எம்.எச். லாபீர், திருமதி ஏ.பி. ரொஷான் டில்ராஸ், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் பொறியியலாளர் கமால் நிஷாத், பெற்றோர்-ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், வளவாளர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். எதிர்காலத்தில் பொறுப்புணர்வும் சமூகப் பற்றும் கொண்ட திறமையான மாணவர் தலைவர்களை உருவாக்குவதில் இவ்வாறான வதிவிட தலைமைத்துவ முகாம்கள் முக்கிய பங்காற்றும் என பாடசாலை நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமான இந்த வதிவிட முகாம் சனிக்கிழமை மாலை முடிவுக்கு வந்தது.

No comments

Subscribe Us