தியாகிகள் தினம் 2026: சிறப்பு அஞ்சலி மற்றும் ஞாபகார்த்த கிரிக்கெட் போட்டி!
தியாகிகள் தினம் 2026: சிறப்பு அஞ்சலி மற்றும் ஞாபகார்த்த கிரிக்கெட் போட்டி!
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரான அமரர் தோழர் க. பத்மநாபா உட்பட 13 தோழர்கள் மரணமடைந்த அன்றைய தினமான ஜூன் 19, ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினம் ஆக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இவ்வருடமும் பல்வேறு மாவட்டங்களிலும், புலம் பெயர் நாடுகளிலும் இந்நாள் நினைவுகூரப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 21 அன்று, தோழர் பத்மநாபா சமூக சேவை ஒன்றியதினால் காரைதீவில் அஞ்சலி நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு. V. தயாபரன் தலைமையிலான நிகழ்வில், முன்னாள் பிரதேச சபைச் செயலாளர் திரு. S. நாகராசா அவர்கள் தோழர் நாபா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து நிகழ்வைத் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து, ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்குத் தீபச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இச்சிறப்பு நிகழ்வைச் சிறப்பிக்கும் முகமாக, விவேகானந்தா விளையாட்டு கழகத்தினரால் கல்லாறு மத்திய விளையாட்டு கழகத்திற்கும், காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்திற்கும் இடையில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இப்போட்டியில் கல்லாறு மத்திய விளையாட்டு கழகம் 99 ஓட்டங்களை பெற, விவேகானந்தா அணியினர் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்று, தியாகிகள் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தைத் சுவீகரித்துக் கொண்டனர். சிறந்த ஆட்டக்காரராகக் கயந்தன் அவர்களும், சிறந்த பந்துவீச்சாளராகச் சஞ்சய் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த அஞ்சலி நிகழ்வில், முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் திரு. S. இராசையா, அறங்காவலர் ஒன்றியத் தலைவரும் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வண்ணக்கருமாகிய திரு. R. குணசிங்கம் மற்றும் பத்மநாபா சமூக சேவை ஒன்றிய உறுப்பினர்கள், தோழர்கள், ஊர்ப் பொதுமக்கள், கழக அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இறுதியில், கழகச் செயலாளர் திரு. சசிகரன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது. இந்த நிகழ்விற்குப் புலம்பெயர் வாழ் தோழர்கள் தங்களது அனுசரணையை வழங்கியிருந்தனர்.
No comments