Column Left

Vettri

Breaking News

கண்ணகிகிராமத்தில் திண்மக் கழிவகற்றல் மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்.!!




அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச சபையினால், யுனிசெவ் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் 2008ஆம் ஆண்டு கண்ணகிகிராமத்தில் கட்டுமானங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட திண்மக் கழிவகற்றல் திட்டம், 2010ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்தது. எனினும்,திண்மக்கழிவகற்றலில் காணப்பட்ட  பல்வேறு குறைபாடுகள்  காரணமாக மக்களின் எதிர்ப்பினால், 2016ஆம் ஆண்டு இத்திட்டம் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக திண்மக் கழிவகற்றல் தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச சபை பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகிறது. இந்நிலையில் பெரும் சாவால்களுக்கு மத்தியில் தற்போது, பிரதேச சபைக்குட்பட்ட கழிவுகள் அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொட்டப்படுகின்றன. இதற்காக மாதம் சுமார் ரூ. 60,000 வரை செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில், கண்ணகிகிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்த திண்மக் கழிவகற்றல் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் பொதுமக்களுடன் கலந்துரையாடல் ஒன்று  வெள்ளிக்கிழமை (17) கமு/திகோ கண்ணகி வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆரியதாச தர்மதாச தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டது.


இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ், பிரதேச சபை செயலாளர் சீ. திவாகரன்,பிரதித்தவிசாளர் க.ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன்  வனஜீவராசிகள் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், சுகாதார பரிசோதகர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் RDS அமைப்பினரும் பங்கேற்று கருத்துகளை வழங்கினர்.



கலந்துரையாடலின் போது, கண்ணகிகிராமத்தில் திண்மக் கழிவகற்றல் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கான உத்தேச மதிப்பீட்டு அறிக்கையை இரு வாரங்களுக்குள் பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் வலியுறுத்தினார்.

மேலும், கண்ணகிகிராம பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டு திட்டத்தின் முன்னேற்றங்களை மேற்பார்வை செய்வதுடன், திட்டத்தை கட்டம்கட்டமாக நடைமுறைப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தொடர்ச்சியான கண்காணிப்பின் மூலம் அதன் சாதக-பாதக அம்சங்களை மதிப்பீடு செய்து செயல்படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

செல்வி வினாயக முர்த்தி

No comments

Subscribe Us