இன ஐக்கியத்திற்காக தமது பேனாவை பெரிதும் பயன்படுத்தியவர் மறைந்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் அனுதாபச் செய்தியில் ஆதம்பாவா எம்.பி.
இன ஐக்கியத்திற்காக தமது பேனாவை பெரிதும் பயன்படுத்தியவர் மறைந்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம்
அனுதாபச் செய்தியில் ஆதம்பாவா எம்.பி.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிழக்கின், ஊடக ஒளிவிளக்கு மூத்த பத்திரிகையாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் மறைவு எனக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது,
தினபதி, சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, தினக்குரல், தினக்கதிர், நவமணி, ஈழநாடு என அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் முன்னணி பிராந்திய செய்தியாளராக, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறைக்கு இலங்கையின் தமிழ் ஊடகப் பரப்பில் முத்திரை பதித்தவர்.
“அனார்கலி” மற்றும் “அவதானி” என்ற புனைப் பெயர்களிலும் எழுதிய அவர், நாட்டின் யுத்த காலத்தில் சமாதானத்திற்கான பாலமாகச் செயற்பட்டு மக்களின் மனங்களில் அழியாத தடம் பதித்துள்ளார்.
அவரது சிறப்பான பங்களிப்புகளுக்காக 2008ஆம் ஆண்டு “கலாபூஷணம்” பட்டமும், 2010ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சரின் “வித்தகர்” விருதும் வழங்கப்பட்டதுடன், திகாமடுல்ல பௌத்த சிங்கள சங்கத்தின் “சாஹித்யசூரி” விருதும், 2017ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியல் கௌரவங்களும் அவரைச் சிறப்பித்துள்ளன.
அன்னாரது மறைவு என்பது ஒரு மனிதரின் இழப்பாக மட்டுமல்ல; ஒரு காலத்தின் சாட்சியமாக இருந்த குரலின் மௌனமாகும்.
ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் போன்ற அறிவையும், ஆற்றலையும் பெற்றிருந்த
அன்னாரின் இழப்பு ஊடகத்துறைக்கு பெரும் இழப்பாகும். இன ஐக்கியத்திற்காக தமது பேனாவை பெரிதும் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சமூகத்திற்காகவும் அவரது பேனா அச்சமின்றி எழுதியது.
அன்னாரின் இழப்பால் துயருறும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் துயரத்தில் நாமும் பங்கு கொள்வதுடன் எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் மறுமை வாழ்வுக்கு அருள் புரிய பிரார்த்திக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments