Column Left

Vettri

Breaking News

மட்டக்களப்பில் பெண்கள் கடத்தல் மற்றும் கொலை சம்பவம் : மயக்க மருந்துகள் மீட்பு ; ஒருவர் கைது!!




 மட்டக்களப்பில் பெரும் பரபரப்பையும் பெரும் சோகத்தையும்  ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தப்பட்டு தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி கொலை செய்து வந்த கும்பலுடன் தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக நபரான 37 வயதுடைய ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை வியாழக்கிழமை (26) இரவு மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரே யருடன் கைது செய்ததுடன் கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தி வந்த சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மற்றும் ஸ்பிரே,மாத்திரைகள் என்பவற்றை மீட்டுள்ளதாக கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார்.


கடந்த 20ம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும் ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் ஒருவர் சடலமாக கிணற்றில் இருந்தும். மற்றும் இளம்தாயின் 3 வயதும் 4 மாதம் கொண்ட சிறுமி வயல் பகுதியில் உயிருடனும் மீட்கப்பட்டனர்.

இச் சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜயசுந்தரவின் வழிகாட்டலில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் அதிரடி விசாரணை முன்னெடுத்தனர்.

இதன்போது வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் அவரது 34 வயதுடைய கணவர் அவரது 22 வயதுடைய தம்பியார் மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊறணி, திருகோணமலை, வீதிகளைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் உட்பட 5 பேரை 24 மணித்தியாலத்தில் பொலிசார் கைது செய்தவுடன் இரு ஆட்டோக்கள் கார் ஒன்று மற்றும் கோடாரி, கூரிய ஆயுதங்களை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட இவர்களை கடந்த 22 ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது தங்க ஆபரண கடைகளின் உரிமையாளர் இருவரையும் 27 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொலை கொள்ளையில் ஈடுபட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரையும் 72 மணித்தியாலம் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்கு செய்வதற்கு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் நேரடி வழிகாட்டலில் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களிடம் தொடர் விசாரணைகளின் போது கொள்ளையர்களின் காஞ்சிரம்குடா வீட்டின் பகுதியில் நிலத்தில் மயக்க மருந்துக்களை புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்னர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரேயர் வழங்கி வைத்துள்ளதாகவும் வெளி மாவட்டத்தில் உள்ள ஒருவரிடம் இருந்து இந்த மயக்க மருந்தை பல ஆயிரம் ரூபா பணம் செலுத்தி பெற்றுக் கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து நேற்று வியாழக்கிழமை இரவு கொள்ளையர்களின் காஞ்சிரம்குடா வீட்டை முற்றுகையிட்டு நிலத்தில் இரண்டு அடி ஆழத்தில் பாதுகாப்பாக பொலித்தீன் பைகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சையின் போது பாவிக்கப்படும் 6 மயக்க மருந்துகளை கொண்ட போத்தல் மற்றும் மயக்க மாத்திரைகள், மருந்துகள் மீட்டனர்.

அதனை தொடர்ந்து கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வீடு ஒன்றை முற்றுகையிட்டு 37 வயதுடைய ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை கைது செய்ததுடன் அவரது வீட்டின் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த கொள்ளையர்கள் வழங்கிய மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரேயர் போத்தல் ஒன்றையும் குற்ற செயலுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஒன்றையும் மீட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்தக் கொடூரச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிப்பதுடன் இக்கொலைகளின் பின்னணியில் உள்ள முழுமையான வலையமைப்பை கண்டறியும் நோக்கில் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தி வருகின்றதுடன் குறித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகள் வெள்ளிக்கிழமை (27) மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments