Column Left

Vettri

Breaking News

ரமழான் பெருநாள் தினத்திற்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! இலங்கை ஜனநாயக முன்னணி கட்சி வேண்டுகோள்!!




(அபு அலா)

புனித ரமழான் நோன்புப் பெருநாள் எதிர்வரும் 21 ஆம் திகதி வருகின்றமையினால் அரச ஊழியர்களின் சம்பளத்தை, சம்பள தினத்திற்கு முன்னதாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவர் ஏ.பி.கமால்டீன் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நடைமுறை ஆண்டுக்கான நாட்காட்டியின் பிரகாரம், நோன்புப் பெருநாள் இம்மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இஸ்லாமிய மார்க்க முறைப்படி பெருநாள் தினம் பிறை தென்படுவதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஆசிரியர்களின் சம்பளம் 20 ஆம் திகதியும் ஏனைய அரச ஊழியர்களின் சம்பளம் 24 ஆம் திகதி வழங்கப்படுகின்றன. புனித ரமழான் நோன்புப் பெருநாள் சம்பள தினத்திற்கு முன்னர் வருவதனால் ஆசிரியர்களும், ஏனைய அரச ஊழியர்களும் பாரிய சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. 

தமிழ் சிங்கள புத்தாண்டை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, அரச ஊழியர்களின் அம்மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்கப்படுகிறது. அதேபோன்று புனித ரமழான் நோன்பு காலத்திலும் அரச ஊழியர்களின் அம்மாத சம்பளத்தை முன்கூட்டி வழங்குவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஒருவராக இருப்பதனால் முஸ்லிம் அரச ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் ரமழான் கால மாத சம்பளத்தை பெருநாள் தினத்திற்கு முன்னதாக வழங்கி வைக்க வேண்டுமென இலங்கை ஜனநாயக முன்னணி கட்சி
ஜனாதிபதியையும், அரசையும் கேட்டுக்கொள்கிறது.

No comments