அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவை திணைக்களத்தின் பிரியாவிடை ,இப்தார் நிகழ்வு!!
செல்வி வினாயகமூர்த்தி
அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவை திணைக்களத்தின் பிரியாவிடை மற்றும் இப்தார் நிகழ்வு (27) அக்கரைப்பற்று கிழக்கு கமநல திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில். புனித றமழான் மாதத்தில் ஒன்பதாவது நோன்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வுடன் அக்கரைப்பற்று கிழக்கு கமநல திணைக்களத்தில் கடந்த 06 வருடங்களாக கடமையாற்றி அக்கரைப்பற்று தெற்கு கமநல திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் U.L சம்சுடீன் அவர்களின் சேவையை பாராட்டும் முகமாக இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கிழக்கு விவசாய அமைப்பின் தலைவர் இ.சுவர்ணராஜ் அவர்களினால் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் U.L சம்சுடீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அக்கரைப்பற்று கிழக்கு கமநல திணைக்கள உத்தியோகத்தர்களினால் அவரது சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.அத்துடன் இடம்மாற்றம் பெற்றுச்செல்லும் U.L சம்சுடீன் அவர்களின் சேவைநலன் பாராட்டி வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் ஆரியதாச தர்மதாச அக்கரைப்பற்று கிழக்கு விவசாய அமைப்புக்களின் தலைவர் இ.சுவர்ணராஜ் மற்றும் கமநல திணைக்களத்தின் குழு உறுப்பினர்கள்,அக்கரைப்பற்று விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் , திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பிரியாவிடை நிகழ்வு உணர்வுபூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
ரமழான் மாதத்தின் ஆன்மீகப் பின்னணியில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத ஒற்றுமை, சமூக இணக்கம் மற்றும் பணியிட சகோதரத்துவம் என்பன வலியுறுத்தப்பட்டன.
No comments